சென்னை: பிரபல யூடியூப் சேனல் பரிதாபங்கள் கோபி, சுதாகர் தயாரித்து நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் யூடியூப் சேனல்கள் மக்களிடையே கவனம் பெறத் தொடங்கியதில் இருந்து டெம்பிள் மங்கீஸ் (Temple Monkeys), ஸ்மைல் சேட்டை (Smile Settai) உள்ளிட்ட பல யூடியூப் சேனல்கள் உருவானது.
அந்த வரிசையில், மெட்ராஸ் சென்ட்ரல் (Madras central) யூடியூப் சேனல் மூலம் மக்களிடையே வரவேற்பை பெற்றனர். அப்போது சமகால அரசியல் தலைவர்களையும், நிகழ்வுகளையும் தங்களுக்கு உரித்தான நகைச்சுவை பாணியில் கலாய்த்து வரவேற்பை பெற்றனர். இதனைத்தொடர்ந்து பரிதாபங்கள் என்ற தனி யூடியூப் சேனல் தொடங்கி அன்றாட வாழ்க்கையில் மக்களின் செயல்களை நக்கல், நையாண்டி செய்து சிரிப்பலையை ஏற்படுத்தி பிரபலமடைந்தனர்.
பரிதாபங்கள் வீடியோக்களுக்கு யூடியூப் உலகில் தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. மேலும் சமூக வலைதளங்களில் வெளியாகும் மீம்ஸ்களில் வடிவேலு காமெடிக்கு அடுத்தபடியாக கோபி, சுதாகர் யூடியூப் வீடியோ காட்சிகள் அதிகம் வலம் வரத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு கிரவுட் ஃபண்டிங் முறையில் தமிழ் சினிமாவில் படம் தயாரிக்க முயற்சி செய்தனர். ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் அந்த படம் கைவிடப்பட்டது.
இதனிடையே கோபி, சுதாகர் சோம்பி, உரியடி 2, செவன் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்நிலையில் தற்போது கோபி, சுதாகர் பரிதாபங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம் ஒரு படத்தை தயாரித்துள்ளனர். 'Oh God Beautiful' என்ற தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் அறிவிப்பு வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: டிராகன் படத்தில் முத்தக் காட்சி ஏன்?... பிரதீப் ரங்கநாதன் கொடுத்த விளக்கம்! - PRADEEP RANGANATHAN ABOUT DRAGON
கடந்த மாதம் நக்கலைட்ஸ் யூடியூப் குழுவை சேர்ந்த ராஜ்குமார் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் குடும்பஸ்தன் திரைப்படம் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது பரிதாபங்கள் யூடியூப் சேனல் குழுவினரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.