கரூர்: கரூர் - திருச்சி ரயில் வழித்தடத்தில், திருகாம்புலியூர் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் எர்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் கொடியசைத்து 100 மீட்டர் தூரத்திற்கு முன்னதாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பின்னர், தண்டவாளம் சீரமைக்கப்பட்டு 45 நிமிடம் தாமதமாக ரயில்கள் புறப்பட்டு சென்றது.
கரூர் - திருச்சி ரயில் வழித் தடத்தில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே திருக்காம்புலியூர் பகுதியில் ரயில் தண்டவாளம் வெல்டிங் வைக்கப்பட்ட இணைப்பு பாகத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, ரயில்வே ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தேனியில் இலவசமாக கறி தர மறுத்ததால் ஆத்திரம்? கடை வாசலில் சடலத்தை போட்டுச் சென்ற நபர்...பின்னணி என்ன? |
அந்த நேரத்தில் எர்ணாகுளம்- காரைக்கால் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் சிவப்பு கொடிய காட்டி எர்ணாகுளம்- காரைக்கால் விரைவு ரயிலை, தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு 100 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே நிறுத்தியுள்ளானர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாஸ்கோடாகாமா - வேளாங்கண்ணி மற்றும் ஈரோடு - திருச்சி உள்ளிட்ட விரைவு ரயில் மற்றும் பயணிகள் ரயில்கள் நிறுத்தப்பட்டு ஒரு மணி நேரம் காலதாமதமாக சென்றுள்ளது. விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். எர்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. திடீரென ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.