சென்னை: மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலான சென்னைக்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் (இன்று முதல்) மூன்று நாட்கள் நடைபெறும் வீட்டு வசதிக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தென்னிந்தியாவின் மிகப்பெரும் சொத்துக் கண்காட்சி இது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென உணர உதவுவது கட்டட வளர்ச்சி தான். இந்த கண்காட்சி வளர்ச்சியின் அடையாளம். கிரெடாய் அமைப்பினர் மக்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் முக்கியமானவர்கள். மக்கள்தொகை தொடர்ந்து பெருகி வரும் நிலையில் மக்களின் அனைத்து தேவைகளையும் அரசே நிறைவேற்றி விட முடியாது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற தனியார் அமைப்புகளும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
![கிரெடாய் கண்காட்சியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-02-2025/23542121_cm-new_aspera.jpg)
தமிழகத்தில் 48 விழுக்காடு மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். இது வரும் ஆண்டில் மேலும் உயரும். தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகமாக உள்ளது. எனவே மக்களுக்கான வீட்டு வசதி தேவைகள் அதிகரிப்பதால் புதிய நகரமைப்பு திட்டங்களை தீட்ட வேண்டியுள்ளது. சென்னைக்கான முதல் இரண்டாம் முழுமைத் திட்டங்களை தொடர்ந்து 3 வது முழுமைத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. முழுமை திட்டங்கள் நிலையான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், தொழில்நுட்ப முன்முயற்சி, நகர வளர்ச்சி, மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. சென்னைக்கான 3வது முழுமை திட்டம் அடுத்த 20 ஆண்டுக்கான சென்னை பெருநகரின் வளர்ச்சியை வழிநடத்த உள்ளது.
தமிழகம் முழுவதும் கிராம, நகரங்களை மேம்படுத்த 10 மண்டல திட்டங்கள் தயாராகின்றன. கோவை, மதுரை, ஓசூர், சேலம், திருப்பூர், திருச்சி, வேலூர், நெல்லையை உள்ளடக்கிய 136 நகரங்களுக்கு புதிய திட்டங்கள் தயாராகின்றன. கோவை, மதுரை நகரங்களுக்கான முழுமைத் திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும். மீஞ்சூர், திருமழிசை, திருவள்ளூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலை நகர், திருபெரும்புதூர், பரந்தூர் உட்பட சென்னையை சுற்றியுள்ள 9 வளர்ச்சி மையங்களிலும் 'புது நகர் வளர்ச்சி திட்டம்' தயாராகிறது.
சென்னையை சுற்றியுள்ள பகுதியில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யவும், சென்னையின் நெரிசலை குறைக்கவும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளை பொருளாதார மையமாக மாற்றவும், போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்தவும் புது நகர் திட்டம் உதவும். கடந்த ஆட்சியின் 10 ஆண்டுகளில் இதுபோன்ற பணிகள் தேக்கமடைந்திருந்தன. மனை, கட்டட விண்ணப்பங்களுக்கான ஒப்புதல் தற்போது விரைவாக வெளிப்படையாக வழங்கப்படுகிறது.
கட்டடங்களுக்கான திட்ட அனுமதி 45 விழுக்காடு அதிகரித்துள்ளது, கட்டடங்களுக்கு ஒப்புதல் வழங்கும் கால அளவு 180 இல் இருந்து 64 முதல் 90 நாட்களாக குறைந்துள்ளது. ஏழை, எளியோர், நலிவுற்றோர், நடுத்தர வகுப்பினர் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்க 22.7.24 ல் உடனடி ஒப்புதல் பெறும் வகையில் 'சுயசான்றிதழ் திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலம் 2500 சதுர அடி மனையில் தரைத்தளம் மற்றும முதல் தளம் கொண்ட வீடுகள் கட்ட, அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவாறே சுய சான்று முறையில் அனுமதி பெற முடியும். கட்டட முடிவுறு சான்றிதழ் பெற இத்திட்ட வீடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 31 ஆயிரம் கட்டட அனுமதி கடந்த சிலநாட்களில் பெறப்பட்டுள்ளது. இந்த செயல்முறை மேலும் எளிமையாக்கப்படும்.
சென்னையின் உட்பகுதி நெரிசலை தடுக்க, வெளிவட்ட சாலை இணைப்பை மேம்படுத்த, போக்குவரத்து முனையங்களை பரவலாக்க சிஎம்டிஏ மூலம் கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம், மாதவரம் என 3 இடங்களில் புதிய புறநகர் பேருந்து முனையம் உருவாக்கப்பட்டுள்ளன. குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மாமல்லபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நவீன போக்குவரத்து முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்படும்.
சென்னையின் 12 ஏரிகள், 4 கடற்கரைப் பகுதிகளை தேர்வு செய்து மக்கள் கூடும் இடங்களாக மேம்படுத்த சென்னை நீர்முனைய வளர்ச்சி திட்ட நிறுவனம் மூலம் ரூ.250 கோடியில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் பொழுதுபோக்கு சார்ந்த உட்கட்டமைப்பு, மழைநீர் சேகரிப்பு, வெள்ளத் தடுப்பு உட்கட்டமைப்புடன் உருவாக்கப்படும்.
சிஎம்டிஏ மூலம் 196 நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் ரூ.2600 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செம்மஞ்சேரி நவீன தொழில்நுட்ப விளையாட்டு திடல், தீவுத்திடலில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த பொருட்காட்சி மையம் உள்ளிட்டவை முக்கியமானது. கிராம நகர வேறுபாடு இன்றி அனைத்து பகுதிகளையும் வளர்ப்பதே அரசின் நோக்கம்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கூடுதலாக தொழில் பூங்கா, அலுவலக கட்டடம் தேவை என உலக முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர். கிரெடாய் அமைப்பினர் அதை நிறைவேற்றித் தர வேண்டும் . கிரெடாய் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களின் அருகில் உள்ள பூங்கா நீர்நிலைகளை கிரெடாய் மூலம் பாரிமரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றுந் கிரெடாய் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.