புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடி மலையில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் 'ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம்’ இன்று (பிப்.14) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டமானது, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற நிலையில் ஜல்லிக்கட்டு விழா நடத்தும் கிராமத்தினர், காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜல்லிக்கட்டு நடத்தும் விழா குழுவினர்களிடம் மாவட்ட நிர்வாகம் பிரமாண பத்திரம் கட்டாயத்தின்பேரில் எழுதி வாங்குகின்றனர். அதில் ஜல்லிக்கட்டில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மாடுபிடி வீரர்களோ, காளை உரிமையாளர்களோ விபத்து மற்றும் உயிரிழப்பு நேரிடும்பட்சத்தில், நபர் ஒருவருக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை விழா நடத்தும் கமிட்டியினரே செலுத்த வேண்டும் என்று எழுதி வாங்கப்படுகின்றன.
இதன் காரணமாக பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறையைத் தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து, பங்கு பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசு சார்பில் நடைபெறுகிறது. அதில் ஆன்லைன் முறைகள் இருப்பதில் தவறில்லை. ஆனால், உள்ளூரில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த ஆன்லைன் முறையைத் தமிழக அரசு நீக்கி தரும் என்கிற நம்பிக்கையில் உள்ளோம்.
இதையும் படிங்க: காட்டு மாடை வேட்டையாடிய வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
கோயில்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் பரிசு வழங்காமல் மாடுகள் அவிழ்க்கப்படும், இது தான் பாரம்பரியம் கலாச்சாரம், இதே போன்று தான் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளையும் நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு சிலர் தங்களது பெயர் புகழைப் பரப்ப வேண்டும் என்பதற்காக பரிசு என்ற போர்வையில் ஜல்லிக்கட்டு போட்டிகளைச் சேதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.