வீட்டில் உள்ள மற்ற பகுதிகளை விட கிச்சன் ஸ்லாப்பை சுத்தம் செய்வது தான் மிகவும் கடினமான விஷயம். சமைப்பதற்கு எண்ணெய் பயன்படுத்துவதால் சமையலறையில் அதிக எண்ணெய் பிசுக்கு படிந்து சுத்தம் செய்வது கடினமாக மாறுகிறது. இந்த பிரச்சனையை தடுக்க கிச்சன் சிம்னி எனும் நவீன புகை போக்கி பொருத்தப்படுகிறது. சிம்னி பயனுள்ளதாக இருந்தாலும், அவற்றை சுத்தம் செய்வது என்பது தனி வேலையாக மாறிவிடுகிறது.
கிச்சன் சிம்னியை அவ்வப்போது சுத்தம் செய்யவில்லை என்றால், அதிகமான எண்ணெய் கறை படிந்து விரைவில் பழுதடையும் வாய்ப்பு உள்ளது. பின்னர், புகை வெளியேற்றுவதில் பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமல்லாமல், சிம்னியை கவனமாக சுத்தம் செய்யவில்லை என்றால், கிருமிகள், பூஞ்சைகள் உருவாகி தொற்றுகளை ஏற்படுத்தலாம். இந்நிலையில், கிச்சன் சிம்னியை எளிதாக சுத்தம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
சிம்னி மூடியை சுத்தம் செய்வது எப்படி?: சிம்னியின் மூடியில் படிந்திருக்கும் கறைகளை அகற்றுவதற்கு ஒரு துணியில் வினிகரை நனைத்து, மூடியின் எல்லா பகுதிகளிலும் நன்றாக துடைக்கவும். இப்படி செய்வதால், எண்ணெய் கறைகள் அனைத்தும் நீங்கி பளிச்சென்று மின்னும்.
![கோப்புப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/23520846_1.jpg)
எண்ணெய் பிசுபிசுப்பு நீங்க?: சிம்னியில் உள்பகுதியில் உள்ள வலைகளில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பை முற்றிலுமாக அகற்றி தனிக்கவனம் செலுத்துவது அவசியம். இதற்கு, சிம்னியின் பில்டர் மற்றும் வலைகளை ஒரு அகல பாத்திரத்தில் சேர்த்து, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். பின், அதில் டிஷ் வாஷ் லிக்விட் ஊற்றி பாத்திரத்தை அடுப்பில் வைத்து 30 நிமிடம் தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கினால், பில்டரில் உள்ள எண்ணெய் பிசுக்கு அனைத்தும் நீங்கும். பிறகு, சுத்தமான தண்ணீரில் கழுவி காட்டன் துணியை பயன்படுத்தி துடைக்கவும்.
பில்டர் வலைகளை சுத்தம் செய்வது எப்படி?: ஒரு வாளியில், வினிகர், பேக்கிங் சோடா, கல் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பில்டர் மற்றும் வலைகளை ஊற வையுங்கள். பின்னர், 1 மணி நேரத்திற்கு பின் எடுத்து சுத்தமான நீரில் கழுவுங்கள்.
எப்போது சுத்தம் செய்ய வேண்டும்?: உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் பொருத்து சிம்னியை சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக, இரண்டு மாதங்களுக்கு ஒரு சுத்தம் செய்தால், சிம்னி புது பொலிவுடன் நன்றாக இருக்கும். இதுவே, அதிகளவில் எண்ணெய் பயன்படுத்தினால் மற்றும் காரசாரமான உணவுகளை அடிக்கடி சமைத்தால் மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.
உங்களால் சுத்தம் செய்ய முடியவில்லை என்றால், அதற்கான நிபுணர்களை அழைத்து சுத்தம் செய்ய வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை சர்வீஸ் செய்வது சிம்னியை சிறப்பாக செயல்பட வைக்கும். புகை அகற்றும் எந்திரம் தானே என அசால்ட்டாக இருக்க கூடாது. அவ்வப்போது சுத்தம் நன்கு பராமரித்து வருவது சிம்னி சிறப்பாக செயல்பட உதவுகிறது.
இதையும் படிங்க:
கேஸ் சிலிண்டர் விரைவில் காலியாகி விடுகிறதா? இப்படி சமைத்தால் நிச்சயம் மிச்சப்படுத்தலாம்!
அடிப்பிடித்த பாத்திரத்தை இனி கை வலிக்க தேய்க்க வேண்டும்..இந்த 3 டிப்ஸ் போதும்!