சென்னை: மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சக்திவேல். இவர் தனது நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணிடம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு தருவதாக கூறி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பணியில் இருந்து விலகிய அந்த பெண், சென்னை அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனியார் மென்பொருள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சக்திவேலை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சக்திவேல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் மென்பொருள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சக்திவேல், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மென்பொருள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சக்திவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பெண்
கடன் கேட்டு கொடுக்க மறுத்ததால் பொய்யான பாலியல் புகார் அளித்ததாக வாதிட்டார். மேலும், தனியார் மென்பொருள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சக்திவேலுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற வாதத்தையும் வழக்கறிஞர் முன் வைத்தார்.
அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், சக்திவேல் மீது மேலும் பல பெண்கள் பாலியல் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். ஜாமீன் வழங்கினால், அமெரிக்க குடியுரிமை வாங்கி வைத்திருக்கும் சக்திவேல் அங்கு தப்பி செல்லவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி கார்த்திகேயன், தனியார் மென்பொருள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சக்திவேலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.