வேலூர்: மலை உச்சியில் கூடாரம் அமைத்து உணவு சமைத்து சாப்பிட்டு புதையல் தேடிக் கொண்டிருந்த கும்பல், உள்ளூர் இளைஞர்களை கண்டதும் தப்பியுள்ளது. தப்பி சென்ற மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவநாதபுரம் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
வேலூர் மாவட்டம், அரியூர் அடுத்த சிவநாதபுரம் பகுதியில் 5,000 அடி உயரம் உள்ள மலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் பழமை வாய்ந்த ஆதி கைலாசநாதர் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் புதையல் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில், மலையின் மேல் உள்ள பாழடைந்த கோயில் சுவர்களில் உள்ள கற்களை யாரோ உடைப்பதாக சிவநாதபுரம் இளைஞர்களுக்கு தகவல் சென்றுள்ளது. இதனை அடுத்து இளைஞர்கள் மலையின் மேல் சென்றுள்ளனர். அங்கு கோயிலின் அருகே உள்ள இடத்தில் கூடாரம் அமைத்து பத்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் இருந்துள்ளனர்.
அவர்கள் கோயில் சுவர் அருகே சாரங்களைக் கட்டி கற்களை உடைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இளைஞர்கள் வந்ததை கண்ட அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். அவர்களை பின் தொடர்ந்து சென்ற இளைஞர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: தேனியில் இலவசமாக கறி தர மறுத்ததால் ஆத்திரம்? கடை வாசலில் சடலத்தை போட்டுச் சென்ற நபர்...பின்னணி என்ன?
விசாரிக்கையில், சிலர் சேலம் என்றும், பாண்டிச்சேரி என்றும் மாறி மாறி பதில் கூறியுள்ளனர். மேலும், வேலூர் கந்தனேரி பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர் தான் எங்களை அழைத்ததாக கூறியவர்கள் பாறைகளை உடைக்க வைத்திருந்த மண்வெட்டி, உளி உள்ளிட்ட ஆயுதங்களை கட்டிக் கொண்டு கிளம்பியுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்த அவர்கள் அங்கு கூடாரம் அமைத்து உணவு சமைத்து சாப்பிட்டு அங்கேயே தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், இளைஞர்கள் ஒரு சிலரே அங்கு இருந்ததால் தப்பி சென்ற மர்ம நபர்களை தடுத்து நிறுத்தமுடியவில்லை.
வேலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மலையில் அங்கேயே தங்கி சிலை மற்றும் புதையல் உள்ளதா? என தேடி பார்த்த இந்த கும்பல் குறித்து வனத் துறையினர் ஏன் கண்டு கொள்ளவில்லை? என்றும் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.