சேலம்: எடப்பாடியில் தனியார் பள்ளி வாகனத்தில் இருக்கையில் இடம் பிடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் மாணவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கந்தகுரு ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கந்தகுரு வழக்கம்போல் நேற்று (பிப்ரவரி 10) மாலை பள்ளி முடிந்ததும் பள்ளிப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, இருக்கையில் அமர்வது தொடர்பாக மாணவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில், சக மாணவர் ஒருவர் கந்தகுருவை அடித்து பேருந்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில், படுகாயமடைந்த கந்தகுருவை உடனடியாக எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வேலூர் அருகே வனப் பகுதியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்...வனத்துறையினர் தீவிர விசாரணை! |
இங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று (பிப்ரவரி 11) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால், உயிரிழந்த மாணவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தனியார் பள்ளி வளாகத்தின் முன் சூழ்ந்ததால் அங்கு பதட்டமான சூழல் நிலவியுள்ளது. இதனால், தனியார் பள்ளிக்கு அசம்பாவிதம் நிகழாவண்ணம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடப்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பேருந்தில் ஓட்டுநர் மட்டுமே இருந்ததாகவும், மாணவர்களை இறக்கி விடும் உதவியாளர் இல்லை என கூறப்படுகிறது. தனியார் பள்ளி வாகனத்தில் இருக்கை பிடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 9 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.