சென்னை:இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநராக அறியப்படுபவர். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பிடித்துள்ளவை. குறிப்பாகக் காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்கள் எல்லா தரப்பினரும் ரசிக்கும் படங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளவை.
சமீப காலமாக நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். பீஸ்ட், சாணிக் காயிதம், பகாசூரன், மார்க் ஆண்டனி என நடிப்பிலும் அசத்தி வருகிறார். அதுமட்டுமின்றி எக்ஸ் தளத்தில் அவ்வப்போது சில கருத்துக்கள் பதிவிட்டு வருவார். சில தத்துவங்கள் பதிவிடுவது மற்றும் நல்ல கலைஞர்களைப் பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தற்போது, நடிகர் கவின் மற்றும் மணிகண்டன் இருவரையும் பாராட்டிப் பதிவிட்டுள்ளார். அதில், கவினும் மணிகண்டனும் சிறந்த நடிகர்கள். அவர்கள் இருவரிடமும் உள்ள நல்ல விஷயம் அற்புதமாகவும், யதார்த்தமாகவும் நடிக்கக் கூடியதுதான். எந்த கதாபாத்திரத்தையும் எளிதாக உள் வாங்கி நடிக்கக் கூடியவர்கள். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த நடிகர்கள் என்று பாராட்டியுள்ளார்.