சென்னை: ஆர்.கே நகர் தொகுதி மக்களின் 70 ஆண்டு பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், கொருக்குப்பேட்டையில் மத்திய அரசின் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் திறந்து வைத்தார்.
சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் வைத்தியநாதன் மேம்பாலத்திற்கு அருகே உள்ள பகுதிகளான நேதாஜி நகர், மீனாம்பாள் நகர், அண்ணா நகர், பாரதி நகர், கலைஞா் நகர், சிகிரந்தபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கு அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களுடைய வங்கி தேவைகளுக்காக வைத்தியநாதன் மேம்பாலத்தைத் தாண்டி தண்டையார்பேட்டைக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
அதனால், இப்பகுதியில் வங்கி திறக்க வேண்டும் என சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எபினேசர், தேர்தலின்போது கொருக்குப்பேட்டை பகுதியில் மக்களின் அலைச்சலைக் குறைக்கும் வகையில் வங்கி திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்ற அவர் வங்கி திறப்பது குறித்து சட்டமன்றத்தில் பேசியதைத் தொடர்ந்து கொருக்குப்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில், சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை அலுவலகம் நேற்று (ஜன.22) திறக்கப்பட்டது.
சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் இந்துமதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வங்கியின் பொதுமேலாளர் தூயவன், ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜிகணேசன், திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருதுகணேஷ் மற்றும் ஆர்.கே நகர் பகுதி வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: எமிஸ் இணையத்தில் பதிவு: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
இந்த நிகழ்ச்சியில், வங்கி கிளையின் வாடிக்கையாளர்களுக்கான புதிய கணக்குகள் திறக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு லோன் மேளா மூலம் வங்கிக் கடன்களும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், "ஆர்.கே நகர் தொகுதி மக்களின் 70 ஆண்டுக் கால பிரச்சனையைத் தீர்க்கும் விதமாக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, இன்று இப்பகுதியில் வங்கி திறக்கப்பட்டுள்ளது என்றார்.
அதேபோல, தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இன்னும் இரண்டு மாதத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் எனவும், ஆர்.கே நகர் தொகுதியில் கட்டப்பட்டு வரும் 2 மேம்பாலங்கள் 18 மாத காலத்தில் கட்டி முடிக்கப்படும் எனவும், இன்னும் இரண்டு மாத காலத்தில் அதற்கான பணிகள் துவங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வங்கியின் நிர்வாக இயக்குநர் இந்துமதி, "வங்கியில் நகைக் கடன், மகளிர் சுய உதவி கடன் என அனைத்து வகையான கடன்கள் வழங்கப்படும், மாதந்தோறும் தவறாமல் தவணை செலுத்தினால் மீதமுள்ள அசல் தொகைக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படும் எனத் தெரிவித்தார்.