சென்னை: சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘SK25’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. ஜீவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும்.
மிகப்பெரும் பொருட்செலவில் வரலாற்று திரைப்படமாக உருவாகிறது. மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி, சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகவும், அதர்வா சிவகார்த்திகேயனுக்கு தம்பியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் 25வது படத்திற்கு ’பராசக்தி’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும், அதன் அறிவிப்பு வீடியோ வரும் பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் டைட்டில் அறிவிப்பு வீடியோ தணிக்கை செய்யப்பட்டு, அதன் சான்றிதழ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் புறநானூறு என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர் அப்படம் கைவிடப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு புறநானூறு என தலைப்பிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது தலைப்பு மாற்றபட்டுள்ளது.
ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன், ’பராசக்தி ஹீரோடா’ என வசனம் பேசுவது போன்ற ரீல்ஸை தற்போது ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படத்தின் தலைப்பு ’பராசக்தி’ என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
#SK25 Titled #Parasakthi ..🔥 Eagerly waiting for the Announcement Teaser..🤩#Sivakarthikeyan | #SudhaKongara | #GVP
— Laxmi Kanth (@iammoviebuff007) January 22, 2025
இதையும் படிங்க: நடிகர் கவினின் புதிய படம் மார்ச் மாதம் ரிலீஸ்... இயக்குநராக அறிமுகமாகும் நடன இயக்குநர் சதிஷ் - KAVIN NEXT MOVIE UPDATE
SK23 திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் தனது 24வது படத்தில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சிபி சக்கரவர்த்தி, சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான ’டான்’ திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.