சென்னை: காவல்துறையால் சுடப்பட்ட பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக்கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், அவரின் மருத்துவ அறிக்கையைத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல ரவுடி பாம் சரவணனின் மனைவி மகாலக்ஷ்மி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "பல வழக்குகளில் காவல் துறையால் தேடப்பட்டு வந்த தனது கணவரை ஜனவரி 14ஆம் தேதி, போலீசார் சுட்டுப்பிடித்ததாகக் கூறியுள்ளனர். இதில், தனது கணவருக்கு இடது காலில் துப்பாக்கி குண்டுக் காயம் ஏற்பட்டதாகவும், பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த குண்டு அகற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், குண்டு அகற்றப்பட்ட பின்னரும் தொடர்ந்து ரத்தக் கசிவு உள்ளதாகவும், அதனை சரி செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கோரி ஜனவரி 18ஆம் தேதி சிறை நிர்வாகத்திடம் அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். எனவே, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெறாத காட்சிகளுக்கு பதிப்புரிமை கோர முடியாது - நெட்பிலிக்ஸ் மனு!
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், பாம் சரவணனுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்வதாகவும் கூறினார்.
இதனையடுத்து, பாம் சரவணனின் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.