மதுரை: ஈர நிலங்கள் என அழைக்கப்படும் சதுப்புநிலக் காடுகளை, பறவைகள் வாழும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புச் செய்வதும், தொடர்ந்து அவற்றை அழிப்பதும்தான் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களுக்குக் காரணம். அவற்றைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் மிக மிக அவசியம் என உலக ஈர நிலங்கள் தினத்தில் சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.
'யுனெஸ்கோ - உலகப் பாரம்பரிய மையம்' ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2-ஆம் தேதியை 'உலக ஈர நிலங்கள் தினமாக' (World Wetlands Day) அனுசரித்து வருகிறது. சுற்றுச்சூழல் மேம்பாட்டில் மட்டுமன்றி, பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரிடர்களைக் களைவதற்கு, ஈர நிலங்களின் பங்களிப்பு மகத்தானது என்பதை உணர்ந்து, அந்நிலங்களைப் பாதுகாப்பதற்கும், அதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்களிடம் உருவாக்குவதற்கும் பல்வேறு முயற்சிகளை யுனெஸ்கோ மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் தமிழக அரசின் அருங்காட்சியகத்துறை சார்பில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஈர நிலங்கள், சரணாலயங்கள், சதுப்பு நிலக்காடுகள் ஆகியவற்றின் புகைப்படங்களைக் கொண்ட கண்காட்சி ஒன்றை நடத்துகிறது. மேலும், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்கும் ஓவியம், கட்டுரை மற்றும் வாசகங்கள் உருவாக்குதல் போட்டிகளையும் நடத்துகிறது.
சிறுநீரகம் போன்று முக்கியத்துவம் வாய்ந்தது ஈர நிலம்:
இதுகுறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் ராஜேஷ் கூறுகையில், "கடந்த 1971ஆம் ஆண்டு ஈரான் நாட்டிலுள்ள ராம்சர் என்ற இடத்தில் 175 நாடுகள் இணைந்து ஈர நிலங்கள் குறித்து மாநாடு நடத்தி, அவற்றைப் பாதுகாப்பது தொடர்பான பல்வேறு தீர்மானங்களை இயற்றின. பல்லுயிர்ச் சூழலுக்கும், பொதுமக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த 89 ஈர நிலங்களைப் பட்டியலிட்டு இந்திய அரசு அறிவித்தது.
அதில், 20 ஈர நிலங்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடமும், உத்தரப்பிரதேசம் 2-ஆவது இடமும் பெற்றுத் திகழ்கின்றன. மனித உடலுறுப்புகளில் சிறுநீரகம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததோ அதை போன்றதே இந்த ஈர நிலங்களும். நிலத்தடி நீரைச் சுத்திகரித்து நமக்கு குடிப்பதற்கு ஏற்றவாறு வழங்குகின்ற பணியை இந்த ஈர நிலங்களே செய்கின்றன.
ஈர நிலத்தை பராமரிக்க வேண்டுகோள்:
முந்தைய காலத்தில் மன்னர்கள் நீர்நிலைகளை வெட்டும் பணியை மேற்கொண்டதற்கு முக்கியக் காரணம், உயிர்களை வாழ வைக்கும் தண்ணீருக்காகத்தான். அந்த நீர்நிலைகளின் முக்கியத்துவம் குறித்து இப்போதுதான் நாம் உணர்கிறோம். ஒரு குளமானது நிலத்தடி நீருக்காக மட்டுமன்றி, பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய வாழ்வாதாரமாகவும் திகழ்கின்றன. தற்போது இந்திய அரசு அறிவித்துள்ள ஈர நிலங்களைப் பார்த்தால் அவற்றுள் பெரும்பாலானவை பறவைகள் சரணாலயங்களே. இவற்றை நோக்கி வெளிநாடுகளிலிருந்து பறவைகள் ஆயிரக்கணக்கில் வருகை தருகின்றன.
மதுரையை எடுத்துக் கொண்டால், கரிசல்குளம் கண்மாய் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது. அவனியாபுரம் வெள்ளக்கல், திருநகர் தென்கால் கண்மாய், சேமட்டான் குளம் ஆகியவற்றில் பெருகியுள்ள ஆகாயத்தாமரை, பெரும் கேடாக மாறியுள்ளன. ஆகையால் இந்த ஈர நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள ஈர நிலங்களை பராமரிக்க வேண்டும். அரசாங்கத்தை எதிர்பார்ப்பதைவிட பொதுமக்களே முன் வந்து பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்ஜெட் 2025: விவசாயிகளுக்கு அடித்த லக்.. வேளாண்மைக்குக்கு முக்கியதுவம் கொடுத்த நிதியமைச்சர்!
இதுகுறித்து மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ.மருதுபாண்டியன் கூறுகையில், "ஈர நிலங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மதுரை அரசு அருங்காட்சியகம் இந்தப் புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இங்கு 270 புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. நீர் வள மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தியவர்கள் பாண்டிய மன்னர்கள்.
வெள்ளப்பெருக்குக்கு இதுவே காரணம்:
உலக உயிரின உற்பத்திக்கு நீர் என்பது மிகவும் அவசியம். அவற்றைப் பராமரித்துப் பாதுகாக்கும் பட்சத்தில் தான் உயிரினங்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ இயலும். பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டு ஏறக்குறைய நகரங்கள் உருவாகியுள்ள நிலையில், பல்வேறு பேரிடர்கள் நிகழ்வதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை நவம்பர், டிசம்பர் மாதங்களில் மிகப் பெரிய அளவில் மழை, வெள்ளம், புயல் சேதங்கள் நிகழ்கின்றன.
இவற்றுக்கெல்லாம் முக்கியக் காரணம், சதுப்பு நிலங்களை நாம் பாதுகாக்கத் தவறியதுதான். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிக்கப்பட்டதுதான் சென்னை போன்ற பெருநகரங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்குக்கு முக்கியக் காரணம். ஈரநிலங்கள் குறித்த விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட மாணவ, மாணவியருக்காக இந்தப் புகைப்படக் கண்காட்சியும், போட்டிகளும் அரசு அருங்காட்சியகம் சார்பாக நடத்தப்படுகிறது" எனத் தெரிவித்தார்.