சென்னை: நடிகர் சிலம்பரசன் பிறந்தநாளை முன்னிட்டு 'வல்லவன்', 'மன்மதன்' ஆகிய படங்கள் ரீரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய ‘உறவை காத்த கிளி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சிலம்பரசன். ரசிகர்களால் எஸ்டிஆர், சிம்பு என அழைக்கப்படும் சிலம்பரசன் அதற்கு பிறகு ’காதல் அழிவதில்லை’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை அவரது தந்தை டி.ராஜேந்தர் இயக்கினார்.
இதனைத்தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், 2004ஆம் ஆண்டு சிலம்பரசன் நடித்த ’மன்மதன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிலம்பரசன் உருவெடுத்தார். இதனைத்தொடர்ந்து 2005இல் வெளியான ’தொட்டி ஜெயா’ படத்தில் வித்தியாசமான நடிப்பு மூலம் வரவேற்பைப் பெற்றார்.
இதனைத்தொடர்ந்து 2006இல் சிலம்பரசன் இயக்கி, நடித்த ’வல்லவன்’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் அவரது திரை வாழ்வில் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது. இப்படத்தில் சிலம்பரசனின் நடிப்பை திரைத்துறையினர் அனைவரும் பாராட்டினர். காதலர்களால் போற்றப்படும் திரைப்படமாக விண்ணைத்தாண்டி வருவாயா அமைந்தது.
#SilambarasanTR Birthday Special in Kamala Cinemas..🔥 Manmadhan and Vallavan..⭐ pic.twitter.com/leRrfxxuuP
— Laxmi Kanth (@iammoviebuff007) January 22, 2025
இதனைத்தொடர்ந்து சிம்பு நடித்த வானம், ஒஸ்தி, போடா போடி ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அவரது திரை வாழ்வில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதன் பின்னர் சிம்புவிற்கு கம்பேக்காக அமைந்த திரைப்படம் ’மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தீவிர உடற்பயிற்சி மூலம் சிம்பு உடல் எடையை குறைத்தார்.
இதையும் படிங்க: ’தளபதி 69’: குடியரசு தினத்தன்று வெளியாகும் அப்டேட் என்ன? - THALAPATHY 69 MOVIE UPDATE
இதனைத்தொடர்ந்து தற்போது சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் ’தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி நடிகர் சிலம்பரசன் பிறந்தநாளை முன்னிட்டு மன்மதன், வல்லவன் ஆகிய திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சிலம்பரசன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சிலம்பரசன் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா ஏற்கனவே ரீரிலீஸ் செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் 1000 நாட்கள் தொடர்ந்து ஒரு காட்சி திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.