டெல்லி: இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு 2025-26ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பு ஒரு புறம் வரவேற்பை பெற்று வரும் நிலை மறுபுறம் பீகார் தவிர வேறு மாநிலங்கள் குறித்து பெரிதாக எதுவும் அறிவிப்புகள் இல்லை என்ற கருத்தையும் பெற்று வருகிறது. இந்நிலையில் நாம் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை உற்று நோக்கினால் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அமைந்திருப்பதை அறிய முடியும்.
உதாரணமாக கடந்த ஆண்டு வெளியுறவு அமைச்சகத்திற்கான பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு ரூ.25,277.20 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டும் ரூ.20,516.61 கோடியாக ரூ.5,000 கோடி குறைவாக ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்ஜெட் உள்நாட்டு பொருளாதாரத்தின் வளர்ச்சியை நோக்கி இருப்பதாக வலுநர்கள் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய லண்டன் கிங்ஸ் கல்லூரியில் உள்ள கிங்ஸ் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியரும், அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் சிந்தனைக் குழுவின் துணைத் தலைவருமான (ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை) ஹர்ஷ் வி பந்த், “இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை உள்நாட்டுப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் கையில் அமைந்துள்ளது.
உள்நாட்டு பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சி: இது மிக நல்ல விஷயம். உள்நாட்டு வளர்ச்சி மீது அரசு கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். உள்நாட்டு பொருளாதாரம் வலுவாக இல்லாவிட்டால், உலகளாவிய போட்டியில் ஒரு நாடு இடம் பெற முடியாது. இந்த ஆண்டின் பட்ஜெட் விவசாயம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEகள்), உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இது பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாடு, கல்வி, சுகாதாரம், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு குறிப்பிடத்தக்க நிதியை முன்மொழிகிறது. இது வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை நிலையாக அதிகரிக்க செய்யும். நிதிப் பற்றாக்குறையை 4.8 சதவீதத்திலிருந்து அடுத்த நிதியாண்டில் 4.4 சதவீதமாகக் குறைக்கப்படும் எனவும் அறிக்கையில் கூறியுள்ளனர்.
நாடுகளுக்கான உதவி நிதிகள் குறைப்பு: வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் அமையும் "நாடுகளுக்கான உதவி" போன்ற முக்கிய நிதிகளாக 2024-25 பட்ஜெட்டில் ரூ.5,806.48 ஒதுக்கப்பட்டிருந்தது, ஆனால் அதுவே இந்த ஆண்டு ரூ.5,483 கோடி தான் ஒதுக்கப்பட்டடுள்ளது.
பூட்டான்: இந்த 'நாடுகளுக்கான உதவி நிதியில்’ வழக்கம் போல், பூட்டான் மிகப்பெரிய பயனாளியாக உள்ளது. இந்த முறை, பூட்டானுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,150 கோடி, இது 2024-25 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.2,543.48 கோடியை விடக் குறைவு.
நேபாளம்: கடந்த ஆண்டைப் போலவே ரூ.700 கோடி ஒதுக்கீட்டைக் கொண்ட இரண்டாவது பெரிய பயனாளி நேபாளம். 2023 ஆம் ஆண்டு நேபாளம் அதிபராக முகமது முய்சு தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து மாலத்தீவுகளுடன் இந்தியாவின் உறவு சற்று இணைக்கமாக தொடங்கியுள்ளது. அதன் விளைவாக கடந்த ஆண்டு ரூ.470 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார். இது குறித்து வெள்ளிக்கிழமை (ஜன.31) வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சமீபத்திய ஒப்பந்தங்கள் (சீனா மற்றும் துருக்கியுடனான ஒப்பந்தங்கள் பற்றிய வெளிப்படையான குறிப்பு) மாலத்தீவு அரசாங்கத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது வெளிப்படையாக கவலைக்குரிய விஷயம். மேலும், இது போன்ற ஒப்பந்தங்கள் நாட்டின் நிலைத்து நிற்கும் நிதி நிலை உருவாக்காது. எனவே இதையும் நாம் கணக்கில் வைத்து செயல்பட வேண்டும்” என்றார்.
இலங்கை: மேலும் இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதி உதவிகள் குறித்து பேசிய ஹர்ஷ் வி பந்த், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய நிதி நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டது. அப்போது இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது. இந்நிலையில், கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் இலங்கைக்கும் ரூ.300 கோடி மேம்பாட்டு உதவி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மியான்மர்: அதேபோல் இந்தியாவின் கிழக்கு அண்டை நாடான மியான்மருக்கு ஒதுக்கப்பட்ட வளர்ச்சி உதவிக்கான நிதி ரூ.350 கோடி, அதுவே கடந்த ஆண்டு ரூ.400 கோடியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான்: இந்தியா ஆப்கானிஸ்தானில் அதன் வளர்ச்சிப் பணிகளையும் மனிதாபிமான உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், ஆப்கானிஸ்தானுக்கான வளர்ச்சி உதவி கடந்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடுகளான ரூ.50 கோடியிலிருந்து ரூ.100 கோடியாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எதிர்பார்த்தது முன்னுதாரண பட்ஜெட் ஆனால்.. மத்திய பொது பட்ஜெட் குறித்து ராகுல் கருத்து!
பிற நாடுகள்: மேலும், மொரீஷியஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 500 கோடி, கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டான ரூ. 576 கோடியை விடக் குறைவு, சீஷெல்ஸுக்கு ரூ. 19 கோடி, இது கடந்த ஆண்டின் ரூ. 37 கோடியில் பாதி. இவை தவிர, மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு வளர்ச்சி உதவி நிதியாக ரூ. 225 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டின் ரூ. 200 கோடியை விட சற்று அதிகம்.
தன்னாட்சி அமைப்புகள்: வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ. 394.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ICCR), இந்திய உலக விவகார கவுன்சில் (ICWA), அணிசேரா, பிற வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு (RIS) மற்றும் இந்திய இடம்பெயர்வு மையம் ஆகியவை அடங்கும். இந்த செலவினம், மானிய உதவி சம்பளம் மற்றும் பொது மானிய உதவிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுக்கு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம்: சுயாட்சி அமைப்புகளைத் தவிர, 'பிற மத்திய துறை செலவுகள்' என்ற தலைப்பின் கீழ், ரூ.6,214.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டின் ரூ.10,638.70 கோடியை விட குறிப்பிடத்தக்க குறைவு. இதன் மூலம் இந்த ஆண்டின் பட்ஜெட்டில் வெளியுறவுத்துறை உறவை மேம்படுத்துவதை விட உள்நாட்டு பொருளாதாரத்தை நிலைத்த வளர்ச்சி அடையும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது” என்றார்.
(பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் எழுத்தாளரின் கருத்துகளே. இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மைகளும், கருத்துகளும் ETV பாரத் ஊடகத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை)