சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் மணிகண்டன். 'ஜெய்பீம்' படத்தில் இவரது நடிப்பு முக்கியமாக கவனிக்கப்பட்டது. தற்போது ‘குடும்பஸ்தன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் மணிகண்டன். குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 24ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் 'குடும்பஸ்தன்' பட வெளியீட்டு நிகழ்வின் போது தான் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஷாருக்கான் உட்பட பல நட்சத்திர நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் 'தி கோட்’ திரைப்படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் மறைந்த நடிகர் விஜயகாந்த் தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் விஜயகாந்த் தோற்றத்திற்கு மணிகண்டன் குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில் மிமிக்ரி கலைஞரும், ரேடியோ தொகுப்பாளருமான மணிகண்டன் கணக்கில் வராத நிறைய நடிகர்களுக்கு டப்பிங் பேசியுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் மணிகண்டன், “இப்போதெல்லாம் டப்பிங் பேசியதற்கு படத்தின் ஆரம்பத்தில் நன்றி தெரிவிக்கின்றனர். முன்பு அப்படி கிடையாது. நீங்கள் நினைத்துப் பார்க்காத, கணக்கில் வராத நிறைய படங்களுக்கு குரல் கொடுத்துள்ளேன். சில நடிகர்களால் டப்பிங்கிற்கு வர முடியவில்லையெனில் அல்லது ஏதாவது ஒரு சின்ன வசனம் விட்டுப் போய் விட்டால் நான் தான் அதற்கு டப்பிங் பேசுவேன்.
நீண்ட நாட்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் இந்திய தொலைக்காட்சி தயாரிப்புகளைப் (Indian Television Production) பற்றி ஒரு ஆவணப்படத்தை தயாரித்தார்கள். அதில் கமல்ஹாசன், ஷாருக்கான் இருவருக்கும் நான் தமிழில் குரல் கொடுத்தேன். ரஜினிகாந்தின் சில படங்களில் அவர் பேசாமல் விட்டுப் போன வசனங்கள், சண்டைக்காட்சி சிறப்பு சப்தங்கள் ஆகியவற்றுக்கு குரல் கொடுத்துள்ளேன்.
தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் மறைந்த நடிகர்களான விவேக், மனோபாலா இருவருக்கும் நான் குரல் கொடுத்துள்ளேன். ’வேட்டையன்’ படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஏஐ உதவியுடன் குரல் கொடுத்தேன். ’விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதிக்கு டப்பிங் பேசியுள்ளேன். கிட்டத்தட்ட 10, 12 படங்களில் விஜய் சேதுபதிக்காக டப்பிங் பேசியுள்ளேன்.
நிறைய நடிகர்களின் விட்டுப்போன வசனங்கள், சென்சாரில் திருத்தப்பட்ட வசனங்கள் ஆகியவற்றுக்கு டப்பிங் பேசியுள்ளேன். மிமிக்ரி தெரிந்ததால் இந்த டப்பிங் வாய்ப்புகள் எனக்கு வந்து கொண்டே இருந்தது. நான் டப்பிங் பணியை மகிழ்ச்சியாக செய்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ’தளபதி 69’: குடியரசு தினத்தன்று வெளியாகும் அப்டேட் என்ன?
’குட் நைட்’, ’லவ்வர்’ ஆகிய படங்களுக்குப் பின் மணிகண்டன் நடிக்கும் குடும்பஸ்தன் திரைப்படத்தை ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ளார். மணிகண்டனைத் தவிர இப்படத்தில் குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், மேக்னா சான்வே ஆகியோர் நடித்துள்ளனர்.