சென்னை: ’தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது 'வீர தீர சூரன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகவுள்ளது. அதற்கு பிறகே முதல் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மார்ச் 27ஆம் தேதி ’வீர தீர சூரன்’ திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
’பண்ணையாரும் பத்மினியும்’, ’சேதுபதி’, ’சித்தா’ ஆகிய படங்களின் இயக்குநர் அருண் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். விக்ரமுடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு டீசம்பர் மாதம் ’வீர தீர சூரன்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
டீசருக்கு முன்பு படத்தின் மையமான போலீஸ் ஸ்டேசனை மையப்படுத்தியும் மளிகை கடையை மையப்படுத்தியும் இரண்டு முன்னோட்ட காணொலிகள் வெளியாகின. அவையோடு சேர்த்து டீசரும் இத்திரைப்படம் ஒரு பக்கவான ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்பதை உணர்த்துவதாக இருந்தது. விக்ரம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிவிட்டதால் ரசிகர்களிடையே இது எதிர்பார்ப்பைக் கூட்டியது.
Our deadly #Kaali is all set to meet you in Theatres From 27th March 2025! Mark the date and get ready to witness @chiyaan 's epic action thriller #VeeraDheeraSooran 🔥
— Vikram (@chiyaan) January 22, 2025
An #SUArunkumar Picture 🎬
A @gvprakash musical 🪈🎶
Produced by @hr_pictures @riyashibu_ @iam_SJSuryah… pic.twitter.com/nSzXnSPw8j
படத்தைப் பற்றி இயக்குனர் அருண் குமார் கூறுகையில், “’வீர தீர சூரன்’ படத்திற்கு நிறைய முன்கதைகள் உள்ளன. ஒரு இரவில் நடக்கும் கதை தான் இப்படம். ’வீர தீர சூரன்’ படத்தின் ஜானர் வேண்டுமானால் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கலாம். ஆனால் அதுமட்டுமல்லாமல் இப்படம் வன்முறை, மன்னிப்பு, குற்றவுணர்ச்சி ஆகிய உணர்வுகளைக் குறித்தும் பேசுகிற படமாக இருக்கும் ” என தெரிவித்திருந்தார்.
டீசரில் ’வீர தீர சூரன்’ ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ திரைப்படம் திட்டமிட்டப்படி பொங்கலுக்கு ரிலீஸாகாமல் காலதாமதம் ஏற்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸும் தள்ளிப் போனது. கடந்த வாரத்தில் ’விடாமுயற்சி’ பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் பல்வேறு படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றன.
அந்த வரிசையில் ’வீர தீர சூரன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரியா, தனது எக்ஸ் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு இத்திரைப்படத்தைக் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதன்படி அந்த அறிவிப்பில் ’எங்களுடைய காளி உங்களைப் பார்க்க மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளுக்கு வருகிறான்” என ’வீர தீர சூரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ”ரஜினி, கமலுக்கு டப்பிங் பேசியுள்ளேன்”... மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
முன்னதாக பொங்கலையொட்டி ஜனவரி 11ஆம் தேதி ’வீர தீர சூரன்’ திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம்பெறும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தில் 15 நிமிடத்திற்கு ஒரு சிங்கிள் ஷாட் உள்ளது எனவும் அது ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்ச்சிக்குள்ளாக்கும் எனவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.