சென்னை: தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜன.22) எக்ஸ் தள பக்கத்தில் அடிக்கல் நாட்டுதல் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அதில், '' இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்வு 23.01.2025 அன்று காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடை பெற உள்ளது என்றும் அனைவரும் வருக எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் அந்த பதிவை ரீ போஸ்ட் செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்!'' என குறிப்பிட்டுள்ளார். கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்ட இருக்கும் அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டதற்கான பதிவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது.