சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 52 மாணவ, மாணவிகள் மற்றும் 4 ஆசிரியர்கள், அலுவலர்கள் என மொத்தம் 56 நபர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பாெய்யாமாெழி தலைமையில் இன்று (பிப்ரவரி 23) மலேசியாவிற்கு கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.
2022-2023 ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி, பள்ளி அளவில் கல்வி மற்றும் இணை செயல்பாடுகளான மன்ற செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும் தேசிய அல்லது மாநில அளவிலும் புகழ் பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என அறிவித்திருந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் #திராவிடமாடல் அரசு பொறுப்பேற்றபின் நமது அரசுப் பள்ளி மாணவர்களுடன் 8வது முறையாக பன்னாட்டு கல்விச் சுற்றுலா செல்லவுள்ளோம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) February 23, 2025
‘கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை பன்னாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச்… pic.twitter.com/Y6NNsHHSxY
அதன்படி, 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 4 மன்ற போட்டிகளில், ஒவ்வொரு மன்றத்திற்கும் 25 மாணவர்கள் வீதம் வெற்றியாளர்களாக தேர்ந்தேடுக்கப்பட்டனர். இந்த மாணவர்களை பாராட்டும் வகையிலும், அவர்கள் அறிவை விரிவுபடுத்தும் நோக்கத்திலும், தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி செலவில் வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து சென்றனர்.
ஒவ்வொரு மன்ற வெற்றியாளர்களும் மலோசியா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தென்கொரியாவு போன்ற நாடுகளுக்குச் சென்று தங்கள் பயணங்களிலிருந்து விரிவான அனுபவத்தையும், அறிவையும் பெற்றனர். தொடர்ந்து, நுண்கலை மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களும் அவ்வாறே அழைத்து செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகம்; அம்மா மருந்தகங்களுக்கு பாதிப்பா? - திமுக எம்.எல்.ஏ. விளக்கம்! |
அதேபோல், 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கான அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், முதற்கட்டமாக மாநில அளவில் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களில் 20 மாணவர்கள் , தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஒருவர் மற்றும் அலுவலர் ஒருவர் என அனைவரும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6 நாட்களுக்கு ஹாங்காங் நாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதத்தில் 6 நாட்களுக்கு 42 மாணவர்கள், 3 அலுவலர்கள் மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவர் என அனைவரும் சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிலையில், தற்போது, இன்று (பிப்ரவரி 23) முதல் வருகிற 28 ஆம் தேதி வரை 52 மாணவ, மாணவிகள் மற்றும் 4 ஆசிரியர் அலுவலர்கள் என மொத்த 56 பேர் மலேசியாவிற்கு செல்கின்றனர்.
அங்கு, புத்திரஜெயா சுற்றுலா, பல்கலைக்கழகம் சுற்றுலா, கே.எல்.டவர், கே.எல்.சிட்டி மற்றும் சாக்லேட் மியூசியம், தமிழ் சங்கம் கூட்டம், பட்டு குகை முருகன் கோயில் மற்றும் ஜென்டிங் ஹைலேண்ட் ஆகிய இடங்களை பார்வையிட உள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து, கல்வி சுற்றுலாச் செல்லும் மாணவர்களுடன் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யமாெழி உரையாடினார்.