தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சினிமாவில் 65 ஆண்டுகளை நிறைவு செய்த கமல்ஹாசன்.. டெக்னாலஜியின் நாயகன் கடந்து வந்த பாதை! - 65 years of kamal haasan - 65 YEARS OF KAMAL HAASAN

65 years of kamal haasan: பிரபல நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நடிக்க தொடங்கி 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவர் கடந்து வந்த திரைப்பாதை குறித்து விரிவான அலசல்.

சினிமாவில் 65 ஆண்டுகளை நிறைவு செய்த கமல்ஹாசன்
சினிமாவில் 65 ஆண்டுகளை நிறைவு செய்த கமல்ஹாசன் (Credits - @RKFI X account)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 13, 2024, 12:07 PM IST

சென்னை: பிரபல நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வல்லுநராக 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தனது 6 வயதில் சினிமாவில் 'களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திற்கே ஜனாதிபதியிடம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான உயரிய விருதை பெற்ற கமல்ஹாசன், அதன் பிறகு பல மொழி திரைப்படங்களில் நடித்தார்.

பின்னர் திரைத்துறையில் பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் கமல்ஹாசனுக்கு குருவாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். கே.பாலசந்தர் இயக்கத்தில் 1973இல் 'அரங்கேற்றம்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு கதாநாயகனாக பல மொழிகளில் நடித்தார். பாடகர், எழுத்தாளர், இயக்குநர், நடன இயக்குநர் என சினிமாவில் பலதுறைகளிலும் சகலகலா வல்லவனாக கமல்ஹாசன் தன்னை பட்டை தீட்டி கொண்டார். தமிழில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பேசப்பட்டார்.

ஏக் துஜே கே லியே: பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1981இல் வெளிவந்த 'ஏக் துஜே கே லியே' பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு அக்காலத்தில் பாலிவுட்டில் வெற்றிநடை போட்ட பல நடிகர்களை கதி கலங்க வைத்தது என கூறலாம்.

ராஜ பார்வை:ஒவ்வொரு நடிகரும் தனது 50வது மற்றும் 100வது படங்கள் ஒரு மைல்கல்லாக அமைய வேண்டும் என்ற விருப்பத்தில் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுக்க தயங்குவர். ஆனால் கமல்ஹாசனின் 50வது படம் 'மூன்று முடிச்சு', 100வது படம் 'ராஜ பார்வை' ஆகிய படங்களில் வித்தியசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுவும் ’ராஜ பார்வை’ திரைப்படத்தில் கண் பார்வையற்றவராக நடித்திருப்பார். அப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றி பெறாவிட்டாலும், கமல்ஹாசன் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

பேசும் படம்: இதனைத்தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த 'பேசும் படம்' போன்ற வித்தியாசமான முயற்சியில் ஈடுபட, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்திலும் நடிகர்கள் தயங்குவர். ஆனால் 1987இல் பல மொழிகளில் உருவாக்கப்பட்ட பேசும் படம் சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.

கமல்ஹாசன் இந்திய சினிமாவில் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள்: கமல்ஹாசன் நடிப்பு மட்டுமல்லாது, இன்று பயன்படுத்தப்படும் பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். இன்று திரையரங்குகளில் laser 4k sound, Imax என பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இதற்கெல்லாம விதை போட்டது கமல்ஹாசன் தான்.

1995இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான'குருதிப்புனல்'படத்தில் முதன் முதலாக இந்திய அளவில் dolby atmos sound தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார். அது மட்டுமில்லாது படத்தொகுப்பில் இன்று வரை பயன்படுத்தப்படும் avid சாஃப்ட்வேட் செயலியை முதன்முதலில் 1994இல் தனது'மகாநதி' படத்தில் பயன்படுத்தியிருந்தார். அதேபோல் இன்று திரைக்கதை எழுத பல சாஃப்ட்வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முதன்முதலாக 'தேவர் மகன்' படத்திற்காக சாஃப்ட்வேர் மூலம் திரைக்கதை எழுதினார் கமல்ஹாசன்.

இதற்கெல்லாம் உச்சமாக 2001இல் வெளியான 'ஆளவந்தான்' அமைந்தது. அப்படத்தில் கமல்ஹாசன் பயன்படுத்திய அனிமேஷன் தொழில்நுட்பத்தை பார்த்து, பிரபல ஹாலிவுட் இயக்குநர் டெரண்டினோ தான் இயக்கிய 'கில் பில்' படத்தில் பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து 1996இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ’இந்தியன்’ படத்தில் prosthetic மேக்கப் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் ’விருமாண்டி’ படத்தில் டப்பிங் இல்லாமல் live sound தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் ’விஸ்வரூபம்' படத்தின் மூலம் 'Auro 3D' சவுண்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்.

கமல்ஹாசன் தொழில்நுட்பங்களில் மட்டுமில்லாது ஜனரஞ்சகமான காமெடி படங்களிலும் நடிக்கத் தவறியதில்லை. ‘மைக்கேல் மதன் காமராஜன்’, ‘பஞ்சதந்திரம்’, 'பம்மல் கே சம்பந்தம்', 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்' என ஆகிய படங்கள் இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களின் சிறந்த காமெடி படங்களின் வரிசையில் திகழ்கிறது.

கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். இன்றளவும் சினிமாவில் மேல் கொண்ட அபிமானத்தால் கமல்ஹாசன் தன்னை மெருகேற்றி கொண்டு புதிய கலைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், ரோல்மாடலாகவும் இருந்து வருகிறார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:"ஃபிலிம் மேக்கிங் யாராலும் தவிர்க்க முடியாத மொழியாகிவிட்டது" - நாசர் பெருமிதம்! - Diploma in Film making AI France

ABOUT THE AUTHOR

...view details