டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் நேற்று (ஜன. 31) தொடங்கியது. தொடர்ந்து மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 2 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் வீடுகளின் கூரைகளில் சோலார் மின் தகடுகள் பதிக்கப்படும் திட்டத்தின் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வழிவகை செய்யப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும், குடியிருப்புகளின் கூரைகளில் பொருத்தப்படும் சூரிய மின் தகடுகள் மூலம் மக்கள் சோலார் மின் உற்பத்தி செய்து தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 18 ஆயிர்ம ரூபாய் வரை வருவாய் சேமிக்க முடியும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை தொடர்ந்து பிரதான் மந்திரி சூர்யதய யோஜனா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 1 கோடி விடுகளின் கூரைகளை சோலார் மயமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், எரிசக்தித் துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் என்று பிரதமர் மோடி ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் தெரிவித்ததாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டில் வரி விகிதங்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன்படி இறக்குமதி வரி உள்பட நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படாமல் பழைய வரி நடைமுறைகளே தொடரும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய அரசின் வரி விகிதங்கள் தொடர்பான அறிவிப்பால் புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :Budget 2024: வருமான வரி செலுத்துபவர்களுக்கு நிம்மதி! இடைக்கால பட்ஜெட்டில் வரிவிகித அறிவிப்பு என்ன?