வாஷிங்டன்: மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹாவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தஹாவ்வூர் ராணா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சான்பிரான்சிஸ்கோ மேல்முறையீட்டு நீதிமன்றம் உட்பட பல்வேறு அமெரிக்க நீதிமன்றங்களில் தம்மை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். ஆனால், இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவு ரத்து செய்யப்படவில்லை. இறுதியாக கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில், இந்தியாவுக்கு நாடுகடத்தும் உத்தரவை மறுபரிசீலனை செய்யும் படி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவரது இந்த மனுவை கடந்த 21ஆம் தேதியன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. தஹாவ்வூர் ராணா இப்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மெட்ரோபாலிடன் தடுப்பு மையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அமெரிக்கா அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாத த்தில், ராணாவின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக ப.பா.மோகனை நியமிக்க வேண்டும் - தலைமைச் செயலாளரிடம் மனு!
கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட அமெரிக்க சொலிசிட்டர் ஜெனரல் எலிசபெத் பி பிரிலோகர், இந்த வழக்கில் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதில் இருந்து அவருக்கு விலக்குப் பெற உரிமை இல்லை என்றார். மறு ஆய்வு மனுவில் தஹாவ்வூர் ராணா முன் வைத்த வாதத்தில், "2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் வழக்கில் அமெரிக்காவின் வட மாகாணமான இல்லினாய்ஸ் (சிகாகோ) நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளேன்," என்று தெரிவித்திருந்தார். மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நடந்த தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான்-அமெரிக்க தீவிரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் தொடர்புடையவர் தஹாவ்வூர் ராணா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை நகருக்குள் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் மும்பை நகரின் முக்கியமான இடங்களில் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 6 பேர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.