ஹைதராபாத்: ராமோஜி திரைப்பட நகரில், நாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நிர்வாக இயக்குநர் விஜயேஸ்வரி தலைமைத் தாங்கிய இவ்விழாவில் ராமோஜி குழுமத்தின் உயரதிகாரிகள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
தெலங்கானா மாநிலத்தில் ஓர் முதன்மையான பொழுதுபோக்கு இடமாகவும், தீம் பார்க்காகவும் திகழும் ராமோஜி திரைப்பட நகரத்தில் (RFC), நாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று மிகுந்த உற்சாகத்துடனும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது.
ராமோஜி திரைப்பட நகர வளாகத்தில் நடைபெற்ற கண்கவர் நிகழ்ச்சியில், நிர்வாக இயக்குநர் விஜயேஸ்வரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அவரை தொடர்ந்து திரைப்பட நகரின் பாதுகாப்புப் பணியாளர்கள் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.
ராமோஜி திரைப்பட நகரின் இயக்குநர் கீர்த்தி சோஹனா, ஈடிவி தலைமை செயல் அதிகாரி பாபினீடு, உஷா கிரண் மூவி லிமிடெட் இயக்குநர் சிவா ராமகிருஷ்ணா, துணைத் தலைவர் (விளம்பரம்) ஏ.வி. ராவ், தோட்டக் கலைத் துறை துணைத் தலைவர் ரவி சந்திரசேகர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பெருமைமிகு இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ராமோஜி குழும நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களும் குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கொடியேற்ற நிகழ்ச்சிக்குப் பின், புகைப்பட நிகழ்வு நடைபெற்றது. அப்போது காற்றில் பட்டொளி வீசி பறந்த மூவர்ண தேசியக் கொடியின் பின்னணியில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நாட்டின் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம், ராமோஜி திரைப்பட நகரத்தில் ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.