நீலகிரி: வயநாட்டில் பெண்ணை கொன்ற புலியை கேரள மாநில வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் இன்னும் ஒரு புலி நடமாடுவதாகவும் அதனையும் பிடிக்க அல்லது கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி அருகே உள்ள பஞ்சாரக்கொல்லி பகுதியைச் சேர்ந்த அச்சப்பன் வனத்துறையில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ராதா கடந்த 24ஆம் தேதி வழக்கம்போல தனியாருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் பணிக்கு சென்றார். அப்போது தோட்டத்தின் புதரில் பதுங்கியிருந்த புலி ராதாவை தாக்கியது.
இதில் படுகாயம் அடைந்த ராதா உயிரிழந்தார். இதையடுத்து சக தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். காஃபி எஸ்டேட்டில் வைத்து ராதாவை தாக்கிய புலி சற்று தூரம் இழுத்துச் சென்று கழுத்து, தலையின் பின்பகுதி ஆகியவற்றை தின்றுள்ளது. தலை தனியாக, உடல் தனியாக கிடந்த ராதாவின் உடலை வனத்துறையினர் மீட்டனர். இதனால் அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் தோட்டப்பணிகளுக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியிருந்தனர்.
இதையும் படிங்க: "அம்பேத்கரை இந்திய குடியரசின் தந்தை என்று அழைக்க வேண்டும்" - திருமாவளவன்
இதையடுத்து அந்த ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். புலியை உயிரோடு பிடிக்க முடியாவிட்டால் சுட்டுக்கொல்லும்படி கேரள அரசும் வனத்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து வனத்துறையினர் காப்பித்தோட்டங்களை சுற்றியுள்ள வனப்பகுதியில் புலி பதுங்கியிருக்கிறதா என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கேரள வனத்துறையினர் ஆட்கொல்லி புலியை தேடி காட்டுக்குள் சென்றனர். பதுங்கியிருந்த புலி வனத்துறையினரை தாக்க முயன்ற போது வனத்துறையினர் சுட்டதில் காயத்துடன் புலி தப்பியது . காயத்துடன் தப்பி சென்ற புலி பஞ்சார கொல்லி பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் இறந்து கிடந்தாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று புலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வைத்தனர். இதற்கிடையே சுட்டுக்கொல்லப்பட்ட புலியை தவிர மேலும் ஒரு பலி தங்கள் பகுதியில் நடமாடுவதாகவும், அந்த புலியை உயிரோடு பிடிக்கவோ அல்லது சுட்டுக்கொல்லவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.