இந்தியாவில் இருக்கும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகியவை பயனர்களுக்கு தேவைப்படும் இணையம் இல்லா ரீசார்ஜ் திட்டங்களை செல்லுபடியாகும் காலத்துடன் அறிமுகம் செய்ய வேண்டும் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய் - TRAI) உத்தரவிட்டிருந்தது. பெரும்பாலான மக்கள் இன்னும் சாதாரண பட்டன் போன்களை பயன்படுத்தி வருகின்றனர் எனவும் டிராய் அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தன. டிராய் விதிகளுக்கு இணங்கிய ஏர்டெல், முந்திகொண்டு இரண்டு திட்டங்களை அறிவித்தது. பின்னர், அது தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்டது எனப் பின்வாங்கியது. இது தொடர்பான விரிவான தகவல்களைப் பார்க்கும் முன், முதலில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் என்ன என்று பார்க்கலாம்.
ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல் புதிதாக ரூ.1,849 என்ற விலையில் ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதை தேர்ந்தெடுக்கும் பயனர்கள், ஒரு வருடத்திற்கு எந்த நெட்வொக்கிற்கும் வரம்பில்லாமல் மொபைல் அழைப்புகளை மேற்கொள்ளலாம். மேலும், 365 நாள்களுக்கு 3,600 எஸ்.எம்.எஸ் கிடைக்கும். ஒரு நாளைக்கு கணக்கிடும் போது, ரூ.5.06 விலையில் இந்த சேவைகளை அனுபவிக்கலாம். இதனுடன் மூன்று மாதங்களுக்கு அப்போலோ 24x7 சேவை (இந்த கூடுதல் நன்மையை பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்த முடியவில்லை என புகார் அளித்துள்ளனர்) மற்றும் மாதத்திற்கு ஒரு ஹெலோ-டியூன்கள் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
குறைந்த விலையில் திட்டம் வேண்டும் என நினைக்கும் பயனர்களுக்கு, ரூ.469 ரீசார்ஜ் உதவியாக இருக்கும். 84 நாள்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் பயனர்கள் ரோமிங் உள்பட அனைத்து அழைப்புகளையும் கட்டணமில்லாமல் மேற்கொள்ளலாம். இதனுடன் பயனர்களுக்கு 900 எஸ்.எம்.எஸ்-கள் கிடைக்கும். கூடுதலாக மேற்கூறப்பட்ட இரண்டு சேவைகள் இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, இந்த திட்டங்களில் இருந்து ஏர்டெலின் பிரத்யேக எக்ஸ்ட்ரீம் சேவைகள் கிடைக்காது.
இதையும் படிங்க: சாம்சங் கேலக்சி எஸ்25 சீரிஸ்: AI-ன் மாயாஜால அம்சங்களுடன் அறிமுகம்; ரூ.10,000 வரை கேஷ்பேக்! |
முன்னதாக ஏர்டெல் தங்களின் ரூ.509 திட்டத்தில் இருந்து டேட்டா பலன்களை மட்டும் எடுத்துவிட்டு, வரம்பற்ற அழைப்புகளுக்கான திட்டமிது என தங்களின் இணையதளத்தில் காட்சிப்படுத்தியிருந்தது. இதுகுறித்து கேள்வியெழுப்பிய ஈடிவி பாரத், ஒரே திட்டத்தை மாற்றியமைத்தற்கான காரணத்தை கோரியது. ஆனால், அது தொழில்நுட்ப கோளாறால் நிகழ்ந்தது என நிறுவனம் பின்வாங்கி, புதிய விலையில் திட்டங்களை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரீசார்ஜ் திட்டம்
அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளுக்காக மட்டும் இரண்டு திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஏர்டெல்லை விட குறைவான விலையில் ஜியோ தனது திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் ஒரு வருடம் செல்லுபடியாகும் செல்லுபடியாகும் திட்டத்திற்கு பதிலாக 336 மட்டுமே ஜியோ வழங்குகிறது.
இவர்களின் ரூ.1,748 ரீசார்ஜ் திட்டம் 336 நாள்கள் செல்லுபடியாகும். வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 3,600 எஸ்.எம்.எஸ் ஆகியவையும் பயனர்கள் அனுபவிக்கலாம். கூடுதல் பலன்களாக, ஜியோ டிவி, பிரீமியம் அல்லாத ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகிய சேவைகளும் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
மற்றொரு திட்டமான ரூ.448 ரீசார்ஜ் 84 நாள்கள் செல்லுபடியாகும் திட்டமாக உள்ளது. கூடவே, 1000 எஸ்.எம்.எஸ், வரம்பற்ற அழைப்புகள், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்ற பலன்கள் பயனர்களுக்கு அளிக்கப்படுகிறது. முதலில், ஜியோ 365 நாள்கள் வேலிடிட்டி உடன் ரூ.1,958 திட்டத்தையும், 458 ரூபாய்க்கு மற்றொரு திட்டத்தையும் டேட்டா இணக்கம் இல்லாத வரம்பற்ற அழைப்புகளுடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வோடஃபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டம்
வோடஃபோன் ஐடியாவைப் பொறுத்தவரை, கீழ்வரும் திட்டத்தை செயலப்டுத்தி விட்டு தற்பொது நிறுவனம் கைவிட்டுள்ளது. முன்னதாக ரூ.1460 விலையில் ஒரெ ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 270 நாள்கள் வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்புகள், மொத்தமாக 100 எஸ்.எம்.எஸ்-கள் போன்ற பலன்கள் கிடைக்கும் திட்டத்தை செயல்படுத்திய விஐ, இன்று (ஜனவரி 27) அதை கைவிட்டுள்ளது. இந்த திட்டத்தில் வேறு எந்த கூடுதல் சேவைகளும் விஐ பயனர்களுக்கு வழங்கவில்லை.