திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே முக்கூடல் குளத்தில் பழுதாகி பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத மதகால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், நாள்தோறும் தண்ணீரில் மூழ்கி ஆபத்தோடு மதகை திறக்கும் அவல நிலை நிலவுவதாக அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ளது முக்கூடல் பகுதி. இங்கு சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், அப்பகுதியினர் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கூலி தொழிலையே செய்து வருகின்றனர். அப்படி விவசாயத்தையே நம்பியுள்ள விவசாயிகள், ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோடன்குளம் என்ற குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
உயிரைப் பணயம் வைத்து மதகை திறக்கும் விவசாயிகள்
அதாவது, ஆண்டுதோறும் பெய்யும் மழையில் நிரம்பும் இந்த குளத்தின், தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயிகள் நெல் போன்ற பயிர்களைப் பிரதானமாக பயிரிட்டு வருகின்றனர். இந்த குளத்தை நம்பி அருகில் உள்ள சுமார் 400 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு குளத்திலிருந்து விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க மதகு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த மதகு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழுதடைந்தது.
தற்போது, அந்த மதகை சீரமைத்து சுமார் 65 ஆண்டுகள் கடந்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். அதாவது, வழக்கமாக மதகின் இரும்பு கைப்பிடியை வைத்து குளத்தில் மேலே இருந்து மதகைத் திறந்து அடைக்க முடியும். ஆனால் மதகு பழுதாகியுள்ளதால் இரும்பு கைப்பிடி வேலை செய்யவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இதனால் மதகினை திறந்து அடைக்க முடியாமல், விவசாயிகள் மிகவும் ஆபத்தான முறையில் தண்ணீருக்குள் மூழ்கி மதகின் கண்களை திறக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக 70 வயதைக் கடந்த விவசாயிகள் பெரும் சிரமத்தோடு பயிர்களை காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்து தண்ணீருக்குள் மூழ்கி நாள்தோறும் மதகினை திறந்து அடைத்து வருவதாகவும், மதகை சீரமைத்து தரும்படி விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அதனால் நாள்தோறும் பெரும் இன்னல்களை விவசாயிகள் சந்திப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
இதுகுறித்து விவசாயி மாடசாமி நம்மிடம் கூறும்போது, இந்த மதகு சுமார் 60 - 65 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், தினமும் காலை மாலை என இருவேளையும் சிரமத்தோடு தண்ணீரில் மூழ்கி மதகினை திறக்கிறோம். இந்த பிரச்சனை குறித்து அரசிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அரசு இனியாவது எங்களுக்கு மதகை சரி செய்து தர வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து முக்கூடல் வருவாய் ஆய்வாளர் கோமதியை ஈடிவி பாரத் தமிழ் ஊடகம் சார்பில் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போது, "பொதுவாகக் குளங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான் பராமரிப்பார்கள். எனவே இது குறித்து நான் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கிறேன்" எனத் பதில் அளித்தார்.
இதையும் படிங்க: "4 ஆண்டுகளில் மதுரையில் மட்டும் இத்தனை ஆயிரம் மின்மீட்டர்கள் பழுதா?" - ஆர்டிஐ-யில் அதிர்ச்சி தகவல்!
அதனடிப்படையில் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் விக்னேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, "நான் சமீபத்தில் தான் முக்கூடல் பகுதிக்கு பொறுப்பேற்றேன். இந்த குளத்தின் மதகு பழுது குறித்து இதுவரை எனது கவனத்திற்கு வரவில்லை. இருப்பினும் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்" என்று உறுதியளித்தார்.
விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்குமா?:
ஏற்கனவே விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பெரும் நஷ்டத்தையும், இடுபொருட்களின் விலை உயர்வாலும் விவசாயிகள் பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனர். நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயம் தான் என்ற சூழ்நிலையில், தங்களின் அடிப்படைத் தேவையான தண்ணீரைத் திறப்பதற்கு கூட வழியில்லாமல் உயிரைப் பணயம் வைத்து மதகைத் திறக்கும் முக்கூடல் விவசாயிகளின் நிலை பார்ப்பதற்கு கண்ணீரை வரவழைக்கிறது எனவும், இதுபோன்று விவசாயிகள் அவதிப்படாமல் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.