டெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் என கலைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் பத்ம விருதுகள், இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகும்.
பத்ம ஸ்ரீ உடன் பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிட்ட சாதனைகளை புரிந்தவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த மொத்தம் 13 பேருக்கு இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.