சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அஜித்குமார் நடித்துள்ள புதிய திரைப்படம் ’குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித்குமார் கூட்டணியில் மிக வேகமாக தயாரான திரைப்படம் தான் 'குட் பேட் அக்லி'. கடந்த ஆண்டு படத்தைப் பற்றிய முதல் அறிவிப்பு வந்தபோதே படப்பிடிப்பு துவங்கி பரபரவென போய்க் கொண்டிருந்தது.
2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டபோதுதான் படப்பிடிப்பு முடிந்து படம் தயாராகிவிட்டது என்பதே தெரிய வந்தது. ஆனால் அஜித்தின் மற்றொரு திரைப்படமான 'விடாமுயற்சி' பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ரிலீச் தள்ளிப்போனது.
கடந்த இரண்டு வருடங்களாக அஜித் நடித்த படம் எதுவும் வெளியாகததால் 2025ஆம் ஆண்டு இரண்டு அஜித் படங்கள் வெளியாகவிருக்கின்றன என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் ’விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. பிப்ரவரி 6ஆம் தேதிதான் வெளியானது. படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அஜித் ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை என கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
அதனால் அனைவரது கவனமும் அஜித்தின் அடுத்த திரைப்படமான குட் பேட் அக்லி மீது குவிந்துள்ளது. இதற்கு முன்பாகவே ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 10ஆம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
தற்போது அதற்கான வேலைகளில் ஆதிக் உட்பட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். படம் ஏப்ரலில் வெளியாக இருப்பதால் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரசிகர்களை மகிழ்ச்சியாக்கும் விதமாக குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த வீடியோவில் எந்த கதாபாத்திரங்களும் தெளிவாக காண்பிக்கப்படாமல் மங்கலாக காட்டப்பட்டுள்ளது.
அஜித்தின் தோற்றமும் தெளிவாக காண்பிக்கப்படவில்லை. பின்னணி இசை மாஸ் படத்திற்கானதாக இருக்கிறது என ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். எனவே டீசருக்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. பிப்ரவரி 28ஆம் தேதி டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதில் டீசருக்கான நேரம் தெரிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்
சில தினங்களுக்கு முன்பு தான் இப்படத்தில் த்ரிஷா நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் வீடியோவாக வெளியிடப்பட்டது. அதுவும் எதிர்பாரவிதமாக திடீரென வெளியாகியது. ரம்யா எனும் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார். இதைத்தொடர்ந்து இனி அடுத்தடுத்து இப்படத்திலிருந்து அப்டேட்ஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் பல்வேறு தோற்றங்களில் அஜித் நடித்துள்ளதை அவரது சமீப புகைப்படங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அதில் ஒன்று கேங்ஸ்டர் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. ’மங்காத்தா’ திரைப்படத்திற்கு பிறகு நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் என்பதால் இன்னும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.