திருச்சி: நடிகர் விஜய்யின் கட்சியின் அரசியல் வியூக அமைப்பாளாக பிரசாந்த் கிஷோர் உள்ளார் எனக் கேள்விப்பட்டேன். பிரசாந்த் கிஷோரும் கட்சி வைத்துள்ளார். அந்த கட்சி கடந்த தேர்தலில் சொந்த மாநிலமான பீகாரில் அவர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. என்னைப் பொறுத்தவரை பிரசாந்த் கிஷோர் உள்ளூரில் விலை போகாதவர் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு மற்றும் திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி தலைமையில் முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், திமுக மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, “நான் இந்த கூட்டத்தில் வரப்போகும் தேர்தல் குறித்து உங்களிடம் அதிகமாக பேச நினைக்கிறேன். வரும் வழியில் தான் ஒரு பரபரப்பான செய்தி அறிந்தேன். நடிகர் விஜய்யின் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அரசியல் வியூக அமைப்பாளாக பிரசாந்த் கிஷோர் மேடையில் பேசவிருக்கிறார் எனக் கூறினர். என்னைப் பொறுத்தவரை பிரசாந்த் கிஷோர் உள்ளூரில் விலை போகாதவர். அவரது ஜன் சூராஜ் கட்சி பீகாரில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. டெபாசிட் கூட வாங்கவில்லை. இந்நிலையில் இவர் விஜய்யின் வெற்றி குறித்துப் பேசுகிறார்.
இதையும் படிங்க: அரசு துறைகளில் தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்ற முடியாது - நீதிமன்றம் திட்டவட்டம்!
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் அமித் ஷா கோவை வருகை; தமிழ் மணக்க பாஜகவினர் வரவேற்பு!
முன்னதாக திமுகவிற்கு வேலை செய்த பிரசாந்த் கிஷோர் இன்று தவெகவுக்கு வேலை செய்து வருகிறார். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. இவர்களை எப்படி எதிர்க் கொண்டு வெற்றி பெற வேண்டும், என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்கு அறிவார். இந்த தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் கட்சியும், முதலமைச்சரும் கூறும் அனைத்து விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.