திருவண்ணாமலை: தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி இன்று திருவண்ணாமலை வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மும்மொழி கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்துவதில் அக்கறை காட்டி வருகிறது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை உள்ளதை மத்திய அரசு நன்றாக அறியும். தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தி அல்லாத பிற மாநிலங்களில் இந்தி மொழியை திணக்க மாட்டோம் என அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தெரிவித்தார். இந்தி அல்லாத பிற மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் தாய்மொழி ஆகியவை நடைமுறையில் உள்ளன. ஆனால் தற்போது மத்திய பாஜக அரசு மூன்றாவது மொழியாக இந்தியை கற்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல் திட்டத்தின் ஒன்றாக இந்தி திணிப்பு உள்ளது. ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்று இருப்பதைப் போல ஒரே நாடு ஒரே மொழி என்பதை அடைவதே அவர்களின் நோக்கம். இந்தியாவில் எத்தனை மொழிகள் இருந்தாலும் எத்தனை கலாச்சாரங்கள் இருந்தாலும் அனைத்தும் ஒரே மொழி ஒரே கலாச்சாரமாக இருக்க வேண்டுமென மத்திய அரசு நினைக்கிறது. இந்தியாவில் எத்தனை மொழிகள் பேசுபவர்கள் இருந்தாலும் எதிர்காலத்தில் அவர்கள் இந்தியை கற்றுக் கொண்டு பேச வேண்டும் என்ற நினைப்பில் ஒன்றிய அரசு செயல்படுகிறது.
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை என்பது தொலைநோக்குப் பார்வை அடிப்படையில் பார்க்கும் போது அனைவரையும் ஒரே மொழி பேச வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் உள்ளது. இதனால் தான் மும்மொழி கொள்கை வேண்டாம் என கூறுகிறோம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தரமாட்டோம் என்று சொல்வது பிளாக்மெயில் செய்வது போல் உள்ளது. தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "மத்திய அரசின் கொள்கையே மூன்றாவது மொழியாக இந்தியை அமல்படுத்துவது தான். தற்போது அவர்கள் பூசி மொழுகுவது போல் பேசி வருகின்றனர். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் இந்தியை எளிதாக திணித்து விடலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர். மார்ச் 5ம் தேதி சென்னையில் தமிழ்நாடு முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளாக உள்ள நிலையில் தொகுதி மறு சீரமைப்பு நடைபெற்றால் 31 தொகுதியாக குறையும். மக்கள்தொகை கணக்கெடுப்பை வைத்து இதனை செய்யக் கூடாது. குடும்பக் கட்டுப்பாடு காரணமாக தமிழ்நாட்டில் மக்கள்தொகை சரிவடைந்து உள்ளது.
தமிழ்நாட்டில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லை என்ற நிலையில், திமுக, அதிமுக கட்சிகளை பலவீனப்படுத்தி விட முடியும் என பாஜக கணக்கு போடுகிறது. வடமாநிலங்களில் எங்கு தமிழ் கற்றுத் தரப்படுகிறது?
இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.