மால்கன்கிரி(ஒடிசா): ஒடிசாவின் மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள சித்ரகொண்டா பகுதியில் உள்ள பட்டியலின மாணவர்களுக்கான விடுதியுடன்கூடிய பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த பழங்குடியினத்தை சேர்ந்த மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து விடுதியின் வார்டன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முறையான கண்காணிப்பில் ஈடுபடவில்லை என்று கூறி பள்ளியின் முதல்வர் அஜித் குமார் மத்கானி என்பவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய மால்கன்கிரி மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்ரீனிவாஸ் ஆச்சார்யா, "அரசு பள்ளியின் விடுதி வளாகத்தில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்திருப்பதாக கடந்த 24ஆம் தேதி எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம். இதனைத்தொடர்ந்து அந்த சிறுமி சித்தரகொண்டா சமூக சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மால்கன்கிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அந்த சிறுமி அனுமதிக்கப்பட்டார். இப்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கிளைகள் தொடங்க அனுமதி தேவையில்லை...மத்திய அரசு அறிவிப்பு!
இதுதொடர்பாக ஒரு நபரை சித்தரகொண்டா போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி சம்பவ இடத்துக்கு மாவட்ட விசாரணை குழு சென்றது. குழு அளித்த பரிந்துரையின் பேரில் வார்டனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்வதற்கு பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,"என்றார்.
சிறுமி கடந்த திங்கள்கிழமை காலை 10ஆம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார். பின்னர் தமது தோழிகளுடன் சேர்ந்து விடுதிக்குத் திரும்பினார். அதே நாள் மாலை அவருக்கு பிரசவ வலி வந்துளளது. விடுதி வளாகத்துக்கு உள்ளேயே அவர் குழந்தையை பெற்றெடுத்தார். இதனையடுத்து விடுதியின் வார்டன் அந்த சிறுமியின் தந்தைக்கு தகவல் அளித்தார்.
அங்கு வந்த சிறுமியின் தந்தை,"இதுபோன்ற பெரிய நிகழ்வு எப்படி பள்ளியில் நடந்தது? என் மகளின் இந்த நிலைக்கு யார் காரணம்> பள்ளியின் அதிகாரிகள்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்,"என்று வேதனையுடன் தெரிவித்தார்.