சென்னை: பெண்கள் கர்ப்பம் அடைந்தவுடன் தங்களின் குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற வேண்டும் எனவும், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டும் எனவும் விரும்புவார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக சில நேரங்களில் பிரசவத்தின்போது துயரமான சம்வபங்கள் நடைபெறுகின்றன.
அதனை பெற்றோர்கள் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில் இருப்பர். ஆனாலும் விதிகளின்படி குழந்தை இறந்ததற்கான காரணத்தின் அடிப்படையில் பெற்றோர்களிடம் பாதுகாப்பான முறையில் பச்சிளம் குழந்தைகளின் சடலத்தை மருத்துவர்கள் ஒப்படைப்பர்.
இந்நிலையில், இறந்த குழந்தைகளின் உடலை அட்டை பெட்டியில் வைத்து வழங்குவது மற்றும் கட்டை பையில் வைத்து வழங்குவது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனாலும் அதிலும் சில இடங்களில் பிரச்சனை ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பல்வேறு நிகழ்வுகளில் இறக்கும் பச்சிளம் குழந்தைகளின் உடல்களை உறவினர்களிடம் எப்படி ஒப்படைப்பது? என்பதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாமல் உள்ளது. இந்நிலையில், இறந்த பச்சிளம் குழந்தைகளின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.5000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள்! முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
அரசு அமைத்துள்ள குழு
அதன்படி, மருத்துவம் மற்று ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் ராஜா மூர்த்தி தலைமையில், எழும்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் குப்புலட்சுமி, எழும்பூர் குழந்தைகள் நல ஆராய்ச்சி மையம் இயக்குநர் லட்சுமி, சென்னை மருத்துவக் கல்லூரி தடய அறிவியல் மருத்துவத்துறை தலைவர் பராசக்தி, ஓமந்துரார் தோட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு துறைத் தலைவர் அனிதா, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு தலைவர் முத்துக்குமரன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தடய அறிவியல் மருத்துவத்துறை தலைவர் வினோத், மருத்துவம் மற்று ஊரக நலப்பணிகள் துறை கூடுதல் இயக்குநர் பாலசந்தர் மற்றும் கண்ணகி, தமிழ்நாடு சுகாதார மறு சீரமைப்பு திட்ட வல்லுனர் ஷோபனா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் ஜோசபின் அமுதா உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழிகாட்டுதல்களை தயார் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் பிரவசவத்தின்போது இறக்கும் பச்சிளம் குழந்தைகளின் உடலை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளன.