சென்னை: அனைத்து மொழி சினிமாக்களிலும் இலக்கியத்திலும் மிக அதிகமாக சொல்லப்பட்டதாக காதல் கதைதான் இருக்கும். தமிழ் சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆயிரக்கணக்கான காதல் கதையை பார்த்தும் அவற்றில் சிலவற்றை அழியா காதல் கதையாக காவிய காதலாக கொண்டாடியும் வருகிறது தமிழ் சமூகம்.
அப்படியான ஒரு காவிய காதல் கதைதான் ’விண்ணைத்தாண்டி வருவாயா’. கைகூடாத காதலுக்கு தான் காவியத்தன்மை அதிகம் என்ற விதிக்கேற்ப ’விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்திலும் காதலர்கள் இறுதியில் இணைவதில்லை. அத்தனை கனமான முடிவாக இருந்தாலும் இன்றளவும் ரசிகர்களால் பார்க்கப்படும் கொண்டாடப்பட்டும் வருகிறது ’விண்ணைத்தாண்டி வருவாயா’.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன், த்ரிஷா நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி வெளியானத் திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படம் இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ரீரிலிசான பிறகு வருடக்கணக்ககில் இன்றும் சென்னையின் ஒரு திரையரங்கில் ஒரே காட்சி மட்டும் தினமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கான ரசிகர்களும் வந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.
’விண்ணைத்தாண்டி வருவாயா’ 90ஸ் கிட்ஸ்களால் கொண்டாடப்பட்டு, தற்போது 2கே கிட்ஸ்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் மிக இயல்பான கதாபாத்திரங்களும் காதல் கதையும் தான். கார்த்திக், ஜெஸ்ஸி காதலிக்கும் போது வெவ்வேறு மதமும், மொழியும் பேசக்கூடியவர்கள் என்பது தான் பெரிய பிரச்சனை என நினைத்திருக்கும் போது அவர்களே அந்த காதலுக்கு பிரச்சனையாக இருக்கிறார்கள் எனும் மற்றொரு பார்வையை மிக இயல்பாக நம்முன்னே கதையாக சொல்வார் கௌதம் மேனன்.
தன்னை விட மூத்த பெண்ணை காதலிக்கும் கார்த்திக், காதலை ஏற்றுக்கொள்ளாமலேயே அவனுடன் பழகும் ஜெஸ்ஸி என பூசி மொழுகாமல் உண்மையான கதாபாத்திரங்களாக எழுதப்பட்டிருக்கும் இவை இரண்டும். இருவருக்குமிடையே காதலில் இருக்கும் பிரச்சனைகள் புற காரணிகளாக இருந்தாலும் அவர்களுக்குள்ளே இருக்கும் அக காரணிகள் அதிகபட்சமாக காதல் பிரிவிற்கு பங்காற்றுகின்றன.
மிக சுதந்திரமான பெண்ணின் முடிவுகளை புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் ஆணாகத்தான் கார்த்தி இருப்பான். வாழ்க்கையில் கார்த்தி காதலுக்கு மட்டுமல்ல தன்னுடைய வேலையான சினிமாவிற்கும், அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பான். இதனை பேசி சரி செய்ய முடியாத இடத்தில் தான் ஜெஸ்ஸியும் இருப்பாள். ஆக மொத்தத்தில் நமது பிரிவை வெளியில் இருந்து யாரும் ஏற்படுத்த வேண்டாம் என்பதை ஜெஸ்ஸியும் கார்த்தியும் இறுதியில் புரிந்துகொள்வார்கள்.
முற்றிலும் வேறுபட்ட இரு கதாபாத்திரங்கள் அவர்களுக்கிடையேயான முரண்கள், அன்பு, காதல் என எல்லாவற்றையும் இயல்பாக சொல்லி பார்வையாளர்களை கட்டிப்போடுவார் கௌதம். காதல் படங்களை எடுப்பது கௌதம் மேனனிற்கு புதிது இல்லையென்றாலும் விண்ணைத்தாண்டி வருவாயா அவரது படங்களிலேயே சிறந்த காதல் கதையாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: பிரபுதேவாவுடன் போட்டி போட்டு நடனமாடிய இளைஞர்... ரசிகர்களுக்கு காத்திருந்த ஆனந்த அதிர்ச்சி! - PRABHU DEVA DANCE CONCERT
2009ஆம் ஆண்டு வெளிவந்த ’500 Days of Summer’ எனும் ஆங்கில படத்தின் சம்மர் கதாபாத்திரத்தில் பாதிப்பில் ஜெஸ்ஸி கதாபாத்திரம் எழுதப்பட்டாலும் சம்மரை விட மிக நெருக்கமாக புரிந்துகொள்ளக் கூடியவளாக ஜெஸ்ஸி இருக்கிறாள். அதனால்தான் என்னவோ விண்ணைத்தாண்டி வருவாயா இன்றளவும் ரசிக்கக்கூடிய திரைப்படமாக இருக்கிறது. 15 ஆண்டுகளை நிறைவு செய்தாலும் சரி இன்றும் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளது.