திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புறம், திருச்சூர் மாவட்டங்களில் 10 பேருக்கு வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile virus) காய்ச்சல் பரவி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அதில் ஒருவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நோய் பாதிப்புக்குள்ளானவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தியதில் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிப்புக்குள்ளானவர்களின் மாதிரிகள் புனே நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் வைரலாஜிக்கு அனுப்பப்பட்டதில், அது வெஸ்ட் நைல் பீவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பூசி மற்றும் மருந்துகள் இல்லை என்றும் முனெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு உள்ளிட்ட பூச்சிகளால் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும் கேரள சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பருவமழைக்கு முன்னதாக கொசு ஒழிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒன்றிணைந்து காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து தனிப்படுத்துதல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.