வேலூர்: அடிப்படை வசதி மற்றும் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாத அவல நிலையில் வேலுார் மாவட்டம் அணைக்கட்டு தெற்கு ஒன்றியம் மற்றும் ஆம்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடலைகுளம் மலை அடிவார கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
விஷபூச்சிகள் கொண்ட பாதை: வேலுார் மாவட்டம் அணைக்கட்டு தெற்கு ஒன்றியம் மற்றும் ஆம்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடலைகுளம் மலை அடிவார கிராம பகுதியில் 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 5 தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். அங்கிருக்கும் மக்கள் அன்றாட கூலி வேலைக்கும், அத்தியாவசிய தேவைக்கும், அருகே இருக்கும் ஒடுகத்துார் அல்லது திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த மாதனூர் பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது. இங்கிருக்கும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று வருவதற்கு, மலை கானாறு வழியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன்மூலம் சுமார் ஐந்து கிலோ மீட்டர் துாரம் கொண்ட இந்த கானாறு பாதை முழுவதும் முட்செடிகளும், புதர்களும் சூழ்ந்துள்ளது. அதோடு கானாறு பகுதிக்கு அருகே விஷபூச்சிகள் மற்றும் காட்டு பன்றிகள் நடமாட்டத்துக்கு இடையே கல்வி கற்பதற்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதோடு அவசர தேவைக்கும் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்படும் போது தனிமையில் வசித்தும் வருகின்றனர். மழைக்காலங்களில் குழந்தைகளை அவர்கள் பள்ளிக்கு அனுப்புவதும் இல்லை.
இதன் காரணமாக, பல தலைமுறையாக இங்கு வசித்து வந்த பாதிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஏற்கனவே இந்த ஊரை காலி செய்துவிட்டு நகர்பகுதிக்கு குடியேறி விட்டனர். அதற்கும் வழி இல்லாத பொருளாதாரமும் வாழ்வாதாரமும் இல்லாத காரணத்தால், பலர் இங்கேயே முடங்கி இருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு மலைப்பகுதி வழியாக சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மலைப்பகுதி வழியாக சாலை அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று அரசு தரப்பில் கூறி விட்டனர்.
கண்டுகொள்ளாத அரசு: இதுபோன்ற நிலையில் எங்களுக்கு அணைக்கட்டு, ஒடுகத்துார் பகுதிகளில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் அந்தப் பகுதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் இந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான கல்விக்கும் தடை ஏற்படாது என்றும் அவர்கள் நம்புகின்றனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை.அதோடு தேர்தல் சமயங்களில் மட்டும் இங்கி தவறாமல் வருகைதரும் அரசியல் கட்சியினர், உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துவிட்டு, தேர்தல் முடிந்ததும் அந்த பக்கமே திரும்புவது இல்லை.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடுவிடம் பேசிய கோபி, "நாங்கள் கானாறு வழியாக தான் சென்று வருகிறோம். வேறு மாற்று பாதை கிடையாது. சாலை வசதி தான் எங்களுக்கு பிரதான கோரிக்கை. பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்ல முடியாத நிலை இருக்கிறது. இல்லையனில், வேறு இடத்தில் இடம் வழங்கி வீடு கட்டி தர வேண்டும்,"என்றார்.
சாலை வசதி, மாற்று இடம் தேவை: இதுகுறித்து நம்மிடம் பேசிய தோளப்பள்ளி பகுதியை சேர்ந்த பாக்கியராஜ், "இந்தப் பகுதியில் அருந்ததி இன மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாத அவலம் தான் உள்ளது. இந்த மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கு மாற்று ஏற்பாடாக வசிக்க இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும்,"என்றார்.
கடலைகுளம் பகுதியை சேர்ந்த பிச்சாண்டி,"தேர்தலின்போது மட்டுமே எங்கள் பகுதிக்கு அரசியல்வாதிகள் வருகிறார்கள். ஆனால் எங்களுக்கான அடிப்படை வசதிகள் நிவர்த்தி செய்யப்படவில்லை. சாலை வசதி இல்லாததால் உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு கூட முடியாத நிலை இருக்கிறது. இந்த பிரச்னைக்கு நீங்கள் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்,"என்றார்.
கடலைகுளம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி, "மலையடிவாரத்தில் விஷபூச்சிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் எப்படி வசிக்கிறோம் என்று தெரிந்து கொள்ள அரசும் அரசியல் வாதிகளும் எட்டி பார்க்கவில்லை. எங்களுக்கு மாற்று ஏற்பாடாக சாலை வசதி இருக்கும் பகுதியில் இடம் மற்றும் வீடு வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என்றார். பள்ளி மாணவர் தீபக் கூறுகையில், "கானாறு வழியாக பள்ளிக்கு செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்," என்றார்.