சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடர் முழவதும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு குறித்து ஆளும், எதிர்க்கட்சியினர் தரப்பில் விவாதம் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடர் முழவதும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு குறித்து ஆளும், எதிர்க்கட்சியினர் தரப்பில் விவாதம் மேற்கொண்டனர். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து அலசுகிறது இந்த கட்டுரை!
உரையை புறக்கணித்த ஆளுநர்
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். அந்த வகையில், கடந்த 6 ஆம் தேதி முதல் கூட்டத்தொடரில் உரை நிகழ்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவைக்கு வருகை புரிந்தார். ஆளுநர் உரைக்கு முன்னதாக தமிழ்தாய் வாழ்த்து பாடியதும் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து, ஆளுநர் மரபுப்படி தமது உரையை நிகழ்த்தாமல் பேரவையில் இருந்து வெளியேறினார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் சமூகவலைதளத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்," என கூறப்பட்டிருந்தது.
முதல் நாளன்று அவைக்கு வந்திருந்த அதிமுகவினர் அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் தொடர்பாக யார் அந்த சார் என கேள்வி எழுப்பும் பேட்ஜ்ஜை சட்டையில் அணிந்து வந்திருந்தனர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என பதாகை ஏந்தி சட்டப்பேரவையில் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அதிமுகவினர் அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ஆளுநர் செயல்பாடுகள் கண்டித்து காங்கிரஸ் கட்சியும், பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாஜக,பாமக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். ஆளுநர் உரையில் உள்ளது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்த சிறப்புத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
மன்மோகன், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அஞ்சலி
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாளன்று மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மொழி ராஜதத்தன், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். பின்னர் மறைந்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவை உறுப்பினர்கள அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
கறுப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்
கடந்த 8 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் மூன்றாவது நாள் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். மேலும், டங்ஸ்டன் சுரங்கத்தை தடுப்போம், மேலூரைக் காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய முகக்கவசத்தை அணிந்து வந்திருந்தனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து இதன் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரும் இதில் பொறுப்பு ஏற்க்க வேண்டும் என்றும் அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்க்கு பதில் அளித்து பேசிய முதல்வர், "யார் அந்த சார்? என்று சொல்லி குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகளிடம் அதற்கான ஆதாரம் இருந்தால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கின்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சென்று அதைக் கொடுங்கள். மாணவி மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம். அதை யாராலும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று, அவருக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத் தரக்கூடிய காரியத்தைத் தவிர, தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதைத் தெளிவாக, உறுதியாக, ஆணித்தரமாக முதலிலேயே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்,"என்றார்.
இதையடுத்துமதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இதற்கு பதில் அளித்த முதல்வரும்,நிதி அமைச்சரும்,டங்ஸ்டன் சுரங்கம் வருவதற்கு அப்போதைய அ.தி.மு.க அரசு ஆதரவு கொடுத்ததுதான் காரணம் என தெரிவித்தனர். இதனால் பேரவையில் சிறிது நேரம் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்துHMPV வைரஸ் பாதிப்பு குறித்து பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "HMPV வைரஸ் தற்போது சீனாவில் பரபி வருவது என்றாலும் கூட இது பல ஆண்டுகளுக்கு முன்பாக கண்டறியப்பட்ட வைரஸ்.HMPV வைரசால் எந்த பாதிப்பும் இல்லை. இந்த வைரஸ் வீரியத்தன்மை கொண்ட வைரஸ் அல்ல,"என்றார்.
யுசிஜிக்கு எதிராக தனித்தீர்மானம்
நான்காம் நாள் கூட்டத்தில் துணை வேந்தர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக் குழு, புதிய திருத்தப்பட்ட வரைவை வெளியிட்டதற்க்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கல்வியையும், மக்களையும் காக்க, எதிர்காலத் தலைமுறையைக் காக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டும். இந்தத் தீர்மானத்தை ஏற்று ஒன்றிய அரசு மனம் மாறாவிட்டால் மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம் என்ற முன்னுரையுடன் இந்தத் தீர்மானத்தை நான் உங்கள் அனுமதியோடு முன்மொழிகிறேன்," என்றார். முன்மொழியப்பட்ட தீர்மானம் பேரவை முடிவுக்கு விடப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டத்திருத்தங்கள்
சட்டப்பேரவையின் 5ஆம் நாளன்று கூட்டதொடரில் பங்கேற்க வந்திருந்த தி.மு.க உறுப்பினர்கள், யார் அந்த சார்? என்ற அதிமுக வினரின் கேள்விக்கு பதிலடியாக, இவர் தான் அந்த சார்? என்று குறிப்பிடப்பட்ட பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர். அவர்கள் ஏந்தி வந்த பதாகைகளில் அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான செய்தி குறிப்பிடப்பட்டிருந்தது. அண்ணா நகர் சிறுமி வழக்கில் தொடர்புடையதாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க நிர்வாகியாக இருந்த சுதாகர் படத்தை கொண்ட பதாகைகளை திமுக உறுப்பினர்கள் ஏந்தி வந்தனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த சட்டப்பேரவையில் இரண்டு சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. BNS, BNSS மாநில சட்ட திருத்தம் மற்றும் தமிழ்நாடு 1998 ஆம் ஆண்டின் பெண்களுக்கு துன்பம் விளைவிக்கும் தடை சட்டம் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளுவது என சட்டப் பேரவையில் தீர்மானத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேற்கண்ட சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, தமிழ்நாடு அரசின் 2025ஆம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் திருத்த சட்டம் மற்றும் 2025 ஆம் ஆண்டு பெண்ணுக்கு துன்பம் விளைவிக்கும் தடை திருத்த சட்டம் என இரண்டிலும் உட்சபட்ச மரண தண்டனை அளிக்கும் வகையிலான பிரிவுகள் சேர்க்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 86 சதவிகிதம் வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது,"என்றார். சட்டப்பேரவையில் கொண்டு வந்த இரண்டு சட்ட திருத்தங்கள் சட்ட பேரவையில் முன் வைக்கப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
காரசார விவாதம்
இதையடுத்து ஊரக உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமிப்பது குறித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்."நீட் தேர்வு ரத்து, டங்க்ஸ்டன் விவகாரம், பொள்ளாச்சி சம்பவம், கலைஞர் நாணயம் வெளியீட்டிற்கு பாஜக வை அழைத்தது, சட்டப்பேரவை நேரலையில் அதிமுக உறுப்பினர்களை காட்டாமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்ததால் பரபரப்பு நிலவியது.
கூட்டத்தொடரின் ஆறாம் நாளன்று பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் முதலமைச்சர் கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் நடந்தது. ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கும் சட்டமுன்வடிவு அதிமுக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு இடையில் சட்டமன்றத்தில் நிறைவேறியது.
புதிய அறிவிப்புகள்
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க ஏழு தனிச்சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும். ஏழை, எளிய பட்டியலின மக்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை சீர் செய்தும், புதிதாக நிலங்களை கையகப்படுத்தியும் ஒரு லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும். குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைகளால் சேதப்பட்டுள்ள சாலைகளை சீரமைத்தல் வேண்டும். எனவே, இதற்காக வரும் ஆண்டுகளில் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும்," என அறிவித்தார்.
அண்ணா பல்கலை விவகாரமும், அதிமுக ஆட்சியின்போது நிகழ்ந்த பொள்ளாச்சி சம்பவமும் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியது பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் அளித்த உடன் எஃப்ஐஆர் போடப்பட்டதா இல்லையா என விவாதம் தொடர்ந்தது. இரு தரப்பும் ஆதாரங்களை தருகிறோம் என கூறியிருந்தனர்.
இன்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ஆவணங்களை வழங்கினர். இதுகுறித்து சட்ட சபையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, "பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுக இரு தரப்பும் வழங்கிய ஆதாரத்தில் முதல்வர் கூறியது அப்படியே இருக்கிறது," என்று தெரிவித்தார். உடனே அதிமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர். இதையடுத்து அப்பாவு இருதரப்பும் என்னிடம் வந்து பேசி ஆவணங்களை கொடுத்து விட்டீர்கள். இத்துடன் இந்த விவகாரத்தை விட்டுவிடுங்கள் என்றார்.