சென்னை: சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்த மகேஷ் குமார், ஐபிஎஸ் போக்குவரத்து துறையில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல்ரீதியான தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் விசாகா கமிட்டி விசாரணை செய்து, உண்மை தன்மை தெரியவந்ததன் அடிப்படையில் டிஜிபி சங்கர் ஜிவால், இணை ஆணையர் மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இணை ஆணையர் மகேஷ் குமார், மனைவி அனுராதா தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கும், தன் கணவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தான் அந்தப் பெண்ணை பல முறை நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் கண்டித்து வந்தேன்" எனவும் கூறினார்.
மேலும், தன் கணவரிடம் இருந்து புகார் அளித்த பெண் காவலர் நகைகள், பணம் உள்ளிட்டவற்றை ஏமாற்றி வாங்கி வந்தார். என் கணவரும் புகார் அளித்த பெண் காவலரும் தொடர்ந்து தனிமையில் சந்தித்து பேசி வந்தனர் என்று தெரிவித்தார்.
அது போலவே, கடந்த ஏழாம் தேதி சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள ஒரு விடுதி அறையிலிருந்து இருவரும் வெளியே வரும் கண்காணிப்புப் கேமரா காட்சிகளுக்கான ஆதாரங்களையும் காண்பித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், பாலியல் புகார் கொடுத்த பெண் காவலர் செங்கல்பட்டு அருகே மறைமலைநகர் பகுதியில் புதிதாக வீடு கட்டி வரும் நிலையில், அதற்கு தன் கணவர் மகேஷ் குமாரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு வந்துள்ளார். என் கணவர் தர மறுத்த நிலையில், தற்போது அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் எங்கள் திருமண நாள் அன்று தன் கணவரை பணியிடை நீக்கம் செய்தது, எங்களுக்கு பெரும் மன வேதனையை அளித்துள்ளது. பெண் காவலர் தரப்பில் மட்டுமே விசாரணை செய்து உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தங்களிடமும் விசாரணை நடத்தி இருக்க வேண்டும் என ஆதங்கத்துடன் அனுராதா கூறினார். மேலும், தான் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டிருந்த போது, மகேஷ் குமாரை காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது தான் பணியில் இல்லை எனவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.