சென்னை: நடிகர் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ’டிராகன்’. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ‘டிராகன்’ திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று (பிப்.13) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், இயக்குனர் மிஷ்கின், விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் மிஷ்கின் மேடையில் பேசியபோது, ”இன்று நான் கெட்ட வார்த்தை பேச விரும்பவில்லை. என் ஒரு கொம்பை அறுத்து எடுத்து விட்டனர். இன்னொரு கொம்பு தான் இருக்கிறது. ஒரு வருடத்திற்கு எந்த நிகழ்ச்சிக்கும் வராமல் இடைவெளி எடுக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் மூன்று பேருக்காக நான் இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
#DragonPreRelease - Director #Mysskin ⭐:
— Laxmi Kanth (@iammoviebuff007) February 13, 2025
" i won't speak any bad words.. i wanted to take a sabbatical break from the stage for one year.. or whatever the f... it is.."pic.twitter.com/Z0QG8lfIA9
முதல் காரணம் தயாரிப்பாளர் அகோரம். அவரது கம்பெனியில் நான் எடுத்த படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் எப்போதும் அதை புகழ்ந்துகொண்டே இருப்பார். அவருடைய அன்பிற்காக இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும். அடுத்ததாக பிரதீப், ஒரு புரூஸ் லீ. அவன் இன்னும் சண்டை படங்கள் நடிக்கவில்லை. ஒருவேளை வருங்காலத்தில் என்னுடைய படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு இருக்கிறது.
வெகு நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் இளமையான ஸ்டார் நடிகரை நான் பார்க்கிறேன். யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக வளர்ந்துள்ளான். நடிகராக பிரதீப் சிறப்பாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நான் அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால் நான் நல்ல வில்லன். இங்கு நிறைய நடிகர்கள் இயக்குநர்களுடன் நட்பாக இருப்பதில்லை.
சில நடிகர்கள் நான்கு படங்கள் நடித்ததும் அவர்களுக்கு ஈகோ வந்துவிடும், பின்னர் ரசிகர் மன்றம் வைத்து அவர்களுக்கு பால் ஊற்றி கொண்டாடுவார்கள். அதன் பின்னர் உயரமே ஆகாமல் இரண்டடி வளர்ந்து விடுவார்கள். கூடவே நுனி நாக்கில் ஆங்கிலம் வந்துவிடும், அந்த நடிகர் பின் 200 பேர் வந்து விடுவார்கள் எதற்காக வருகிறார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது. ஆனால் பிரதீப் அப்படி கிடையாது.
என் தம்பி விஜய் சேதுபதி இருக்கிறார் அவரைப் போலவே எளிமையாக இருக்கிறார். நான் அடுத்த படத்திற்காக பிரதீப்பிடம் ஐஸ் வைக்கிறேன் என சொல்வார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. பிரதீப்பை பற்றி என்னுடைய உதவி இயக்குநர்களிடம் அடிக்கடி பேசுவேன். 'என்ன சார் அவன் என்ன பெரிய வெங்காயமா'னு என கேட்பார்கள். ஆமாம், பிரதீப் பெரிய வெங்காயம்தான் என சொல்வேன்.
#Mysskin in #Dragon Event
— Movie Tamil (@MovieTamil4) February 13, 2025
- #BadGirl does not released, we said many reasons
- Bad Girl directed by a girl, There are many reasonspic.twitter.com/CrmtNFVKNj
இந்த சின்ன வயதில் நிறைய ரசிகர்களை பெற்றிருக்கிறார் என்பது வியக்கத்தக்கது. நீ இன்னும் 200 வருடங்கள் வாழ வேண்டும். நீ இப்படியே ஒரு 50 வருடங்களுக்கு இருக்க வேண்டும். உனக்கு வெற்றிகள் வந்து குவிந்து கொண்டே இருக்கும். இயக்குநர் அஷ்வத் மிகவும் உழைக்கக்கூடிய ஒரு இயக்குனர். ஒரு வசனத்தில் கூட கண்டிப்பாக இருப்பான்.நடிப்பதில் இருக்கும் கடினங்கள் நாங்கள் இயக்குனராக இருக்கும்போது தெரிவதில்லை.
ஆனால் நடிக்கும் போது எங்களை இயக்கும் போது நிறைய விஷயங்கள் தெரிகிறது. இந்த படம் எளிதில் அனைவருக்கும் சென்றடையும், இந்தக் காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய நல்ல கதையை அவர்களுக்கு சொல்ல வேண்டிய முறையில் சொல்லியிருக்கிறான். ஒரு கல்லூரியில் படிக்கக்கூடிய நபர் எப்படி இருக்க வேண்டும் என்று அவருடைய வாழ்க்கையில் இருந்து சொல்லி இருக்கிறார். ஜாலியாக சொல்லியிருக்கிறான் அஷ்வத். '
'பேட் கேர்ள்' என்னும் திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அதற்குள் அதை நாம் அமுக்குகிறோம், அதற்கு பல காரணங்களை சொல்கிறோம். அந்தப் படத்தை இயக்கியது ஒரு பெண். பல காரணங்கள் சொல்லலாம். ஆனல் வெறும் டிரெய்லர் மட்டும் வந்ததற்காக அந்த படத்தை கீழே தள்ளிவிட்டு அமுக்குவது நியாயம் இல்லை. இதை இங்கே பதிவு செய்ய வேண்டும் என பேசுகிறேன்.
![இயக்குநர் மிஷ்கின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-02-2025/tn-che-myskinspeech_14022025093738_1402f_1739506058_487.jpg)
இங்கு ஒரு நல்ல ஜாலியான படத்திற்கு உட்கார்ந்து கைதட்டுகிறோம், ஒரு பெண் அங்கே உட்கார்ந்து கலங்கிக் கொண்டிருக்கிறார். இந்த மேடையில் இதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். சினிமாவில் இருக்கக்கூடிய அனைவரும் சேர்ந்து அரசியலில் இருப்பவர்களிடம் பேசி எதை எடிட் செய்ய வேண்டுமோ அதை செய்து அந்தப் படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும்.
ஒரு பெண் இயக்குனராக வரவேண்டும் அது மிகவும் முக்கியமானது. ஒரு 40 அல்லது 20 வருடத்திற்கு ஒரு முறை தான் பெண் இயக்குநர் வருகிறார்கள். அந்த படம் வெளிவதற்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: இயக்குநராக களம் இறங்கும் 'பராசக்தி' தயாரிப்பாளர்... அதர்வாவின் புதிய பட டைட்டில் டீசர்
இறுதியில் மேடையில் நடிகர்களின் படத்தை காண்பித்து ஒவ்வொருவரை பற்றி கேட்டதற்கு மிஷ்கின், பிரதீப் குமார் புகைப்படத்திற்கு இனிய பொறுக்கி என்றும் அஷ்வத் மாரிமுத்திற்உ பெரும் இனிய பொறுக்கி என்றும் இப்படத்தின் நடிகை கயாடு லோஹருக்கு, இவளை என் படத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் காரணம் மிகவும் அழகாக இருக்கிறாள் எனக்கு அவ்வளவு அழகு தேவையில்லை என்பதால் தான் வேண்டாம் என்றேன், என்றார்.
பின்னர் அவரின் படத்தையே காமித்ததற்கு மிஷ்கின், "கண்கள் தெரியாத மான்ஸ்டர். இன்று சினிமாவில் மிகவும் குறைவான நல்லவர்கள் இருக்கும் இடத்தில் அதிக கெட்டவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கஷ்டப்பட்டு கொண்டு எதோ அவரை சரி செய்து கொண்டு இருக்கும் நபர். விரைவில் சினிமாவை விட்டு வெளியே செல்ல இருக்கிற ஒரு இயக்குநர்" என்று கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கினார்.