சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து அவதூறாக பேசி வருவதாக பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் கூட செய்தியாளர்களை சந்தித்த சீமான், '' அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண். இருவரின் சிந்தனையும் ஒன்றா? அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர். பெரியார் தனக்கு தோன்றுவதை எல்லாம் பேசுபவர். பெரியார் சிந்தித்து, பேசியது, எழுதியது எல்லாம் தமிழ் பேரினத்திற்கு எதிரானது. விடுதலை, பிறந்தநாள் செய்தியில் "இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் எதிரிகள். இவர்கள் நமக்கு எதிரானவர்கள்" எனக் குறிப்பிட்டனர். நமக்கு என்று யாரைக் குறிக்கிறீர்கள்? சமதர்மம், சமத்துவம்தானே உங்கள் கோட்பாடு? நமக்குக் கீழானவர்கள் எதிரி என்றால் அவர்கள் எந்த இனம்? இதைவிடக் கொடிய தீண்டாமை சிந்தனை உண்டா?'' என சீமான் பரபரப்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், சீமானுக்கு எதிராக மதுரையில் கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவும் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிங்க: கடன் வாங்கித்தான் ஆயிரம் ரூபாய் தரணுமா? பஸ்ஸுக்கு லிப்ஸ்டிக் அடிச்சது சாதனையா? - எடப்பாடி பழனிசாமி
அப்போது அவர் கூறுகையில், '' தந்தை பெரியார் குறித்து உண்மைக்கு மாறாக பொய்யான அவதூறுகளை தொடர்ச்சியாக பேசி வருகின்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து பல போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். வருகின்ற 20-ஆம் தேதிக்கு பிறகு பல்வேறு ஜனநாயக அமைப்புகளை ஒன்றிணைத்து சீமான் இல்லத்தை முற்றுகையிட உள்ளோம்.
மேலும், தற்பொழுது சீமான் பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார். அழைப்பு வந்ததும் பாஜகவுடன் இணைய தயாராக இருக்கிறார். இதனை அம்பலப்படுத்தும் விதமாக திமுகவிற்கும், பெரியாருக்கும் எதிராக தொடர்ச்சியாக பேசி வருகிறார். குறிப்பாக சங்கிகள் எனது நண்பர்கள் என கூறிய சீமான் சங்கிகளின் பானமாக இருக்கக்கூடிய கோமியத்தை சீமானுக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன். அதனை அவர் குடித்து இந்துத்துவ சார்பு கருத்துக்களை பரப்புவதற்கு அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், அதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து கோமியத்தை சீமானுக்கு அனுப்பி வைக்கும் நூதன போராட்டம் நடைபெற உள்ளது'' என திருமுருகன் காந்தி கூறினார்.