சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உரை வெளியிட்டுள்ளார். அதில், "பாரதக் குடியரசு தன்னுடைய நிறைவான பயணத்தின் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த மங்கலமான தருணத்தில் நான் என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துகளையும், நல்விருப்பங்களையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுடைய உழைப்பாலும், உதிரத்தாலும், வியர்வையாலும் நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த அனைத்து உயிர்த் தியாகிகள், சுதந்திரப் போராளிகள் ஆகியோரை நான் ஆழ்மன நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். பாபா சாஹேப் அம்பேத்கருக்கும், அரசியல் சாசன சபையின் உறுப்பினர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்து, அவர்களை மட்டற்ற நன்றியுணர்வோடு சிந்திக்கிறேன்.
உத்திரமேரூர் கல்வெட்டு சான்றுகள்:
ஒரு வளைந்து கொடுக்கும் தன்மையுடைய, எதிர்கால நோக்கு கொண்டதொரு அரசியலமைப்புச் சட்டத்தை இவர்கள் நமக்களித்தமையால் தான், நமது ஜனநாயகம் பாதுகாப்பாகவும், உயிர்ப்புடையதாகவும் இருக்கிறது. இந்த 75 ஆண்டுகளிலே, நமது அண்டை நாடுகள் உட்பட, உலகின் பல்வேறு நாடுகளில் ஒன்றன்பின் ஒன்றாக ஜனநாயகம் நிலைகுலைவதை நாம் பார்த்திருக்கிறோம்; ஆனாலும் கூட, நமது ஜனநாயகம் மேலும் பலமுடையதாகவும், முதிர்ச்சியுடையதாகவும் காலப்போக்கில் வளர்ந்து வந்திருக்கிறது. ஜனநாயக உணர்வு நமது மக்களிடம் ஊறிப்போயிருக்கிறது. பாரதம் தான் ஜனநாயகத்தின் தாய்நாடு. காஞ்சிபுரம் மாவட்டத்தின் உத்திரமேரூரில் உள்ள ஓராயிரம் ஆண்டுக்காலக் கல்வெட்டுகள் இதற்குச் சான்றாக விளங்குகின்றன.
இந்த நாளன்று, நான் மிகுந்த மரியாதையோடு, அகஸ்திய முனியின் பூமியான, தமிழ்நாட்டின் புண்ணிய பூமிக்கு நான் தலைவணங்குகிறேன். இந்த மண் தான், பாரதம் என்ற எண்ணத்திற்கு உரமிட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாய் அடையாளப்படுத்தி, அதன் அமைவு நோக்கத்தில் வழிகாட்டியது. இந்த மண்ணின் சான்றோர் கூட்டமான தெய்வீகப் புலவர்கள், புனிதர்களும் சித்தர்களுமான -திருவள்ளுவர், திருமூலர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நாயன்மார்கள், ஆழ்வார்களும்; மேலும் பல்லவர்கள், பாண்டியர்கள், மகத்தான சோழர்கள் போன்ற அரசர்களும், ஆன்மீகப் பெரியோரும், சமூக சீர்திருத்தவாதிகளுமான ஸ்ரீ ராமானுஜாச்சாரியார், வள்ளலார், அய்யா வைகுந்தர், ஸ்வாமி ஸஹஜாநந்தர் போன்றோரும், கர்நாடக இசை மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரியும், மாபெரும் சுதந்திரப் போராட்டத் தியாகியான வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றோரும், மகத்தான புரட்சிக்கவியான சுப்பிரமணிய பாரதி போன்றோரெல்லாம் மிக மேன்மைமிக்க ஆன்மீக, இலக்கிய, கலாச்சார மற்றும் நாகரீகத்தின் மரபினை, நமது பெருஞ்சொத்தாக விட்டுச் சென்றிருக்கிறார்கள், இது ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் பெருமிதத்தால் விம்மச் செய்கிறது.
பாரதி இருக்கை:
நமது தேசத்தின் ஆன்மா, காலனியாதிக்க ஆட்சியாளர்களால் கருணையே இல்லாமல் காலில் போட்டு மிதிக்கப்பட்ட போது, இதே புண்ணிய பூமியான தமிழ் பூமி தான், சுவாமி விவேகானந்தருக்கு தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பாரதத்தின் ஆன்மீக, கலாச்சார மற்றும் நாகரீகத்தின் மேன்மைமிக்க மரபு குறித்த ஞானத்தை, 1893 ஆம் ஆண்டு சிகாகோவிலே உலகிற்கு அளிக்க, அவருக்குள் விழிப்பையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. இந்த அறைகூவல் தான் நமது மக்களிடம் விழிப்பினை ஏற்படுத்தியதோடு, விடுதலையை நோக்கிய நமது தேசிய சுதந்திர இயக்கத்திற்கு ஆற்றல் கூட்டியது.
நண்பர்களே...தமிழின் ஆன்மீக, கலாச்சார மற்றும் மொழி பாரம்பரியம் தான் நமது தேசத்தின் பெருமிதம். நாம் பெருமைப்பட உலகத்தாரோடு இவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம். மலேசியாவின் மலேயா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் திருவள்ளுவர் இருக்கைகள், இலங்கையிலும், சிங்கப்பூரிலும் திருவள்ளுவர் மையங்கள், பிரான்சின் செர்ஜியில் திருவள்ளுவர் உருவச்சிலை, ஃபிஜியின் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம் என உலகம் நெடுக, தமிழின் மகோன்னதத்தைப் பரப்பும் வகையில் பல்வேறு நகரங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் திருவள்ளுவர் மையங்களையும், இருக்கைகளையும் ஏற்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறார்.
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கையும், குவாஹாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டயப்படிப்பு போன்ற நடவடிக்கைகளும், தமிழின் புகழினை நாடெங்கிலும் பரப்பி வருகின்றன. பிரிட்டிஷாரிடமிருந்து அதிகாரமாற்றத்தின் கலாச்சாரச் சின்னமாக விளங்கிய, இந்த மண்ணின் புனிதமான செங்கோல், பாரதத்தின் புதிய நாடாளுமன்றத்தில் முழு கண்ணியத்தோடும், கௌரவத்தோடும் நிறுவப்பட்ட வேளையில், நாடு முழுவதும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் உணர்ந்தது. கடந்த மூன்றாண்டுகளின் வருடாந்தர விழாவான காசி தமிழ் சங்கமம், பாரதத்தின் ஆன்மீக-புவியீர்ப்பு மையமான காசியோடு தமிழ் மக்களுக்கு இருந்து வரும் பல்லாயிரம் ஆண்டுக்கால பழமை வாய்ந்த கலாச்சாரத் தொடர்பிற்கு, புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு:
நண்பர்களே, இது பாரத தேசத்தின் பொற்காலம். இது அதன் மறுமலர்ச்சியுகம். பத்தாண்டுகளுக்கு முன்னர், பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்கிய நாம், இன்று உலகின் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக ஆகியிருப்பதோடு, விரைவில் உலகின் 3-ஆவது மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும் ஆக இருக்கிறோம். உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக நாம் இருக்கிறோம். நெடுநாட்கள் புரையோடிப் போன ஏமாற்றம், மனமுறிவு, அவநம்பிக்கை போன்ற உணர்வுகளை விட்டொழித்து, அற்புதமான படைப்புத்திறன், நூதனங்கள் இயற்றல், துணிவாண்மை ஆகியவற்றால் நாம் உலகைப் பிரகாசப்படுத்தி வருகிறோம். நமது நாட்டின் 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஏழ்மையிலிருந்து, பத்தாண்டுகள் என்ற சாதனைக்காலத்தில் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இன்று நமது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோர் தன்னம்பிக்கையோடும், வினைத்திட்பத்தோடும் செயல்படுகிறார்கள்.
மனிதத் துணிவு, விண்வெளி, இணையவெளி, ஆழ்கடல் ஆய்வு, துளிமம் மற்றும் மீநுண் தொழில்நுட்பங்கள், நீடித்த தொழில்நுட்பங்கள், எண்ணியல் பொதுக்கட்டமைப்பு, பொதுநலத் திட்டங்களின் செயலாக்கம், பிணக்குத் தீர்வு, அமைதி போன்ற அனைத்துத் துறைகளிலும் பாரதத்தின் இருப்பு முழக்கமிடுகிறது. உலகின் தயாரிப்புத் துறை மையமாக பாரதம் வேகமாக உருவெடுத்து வருகிறது. அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பினை பாரதத்திற்கு இடம் மாற்றி வருகின்றன. உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்புகளான சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றை நாம் கட்டமைத்து வருகிறோம். ஆய்வுகள்-புதுமைகள் இயற்றலில் நாம் மகத்தான வீச்சை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். பாதுகாப்புத் தளவாடத் துறையில் நாம் தற்சார்பை நோக்கி முன்னேறி வருகிறோம். உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சூழலமைப்புகளில் ஒன்றாக நாம் விளங்கி வருகிறோம். ஒவ்வொரு முக்கியமான துறையிலும் நமது தேசிய குறிக்கோளான தற்சார்பை எட்டுதல் என்பதை நோக்கி நாம் தன்னம்பிக்கையோடு உழைத்து வருகிறோம்.
நண்பர்களே, மனிதர்களை மையப்படுத்தி, சமச் சீரான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் நமது மாதிரியானது, பிராந்திய மற்றும் உட்பிராந்திய வளர்ச்சி இடைவெளிகளை இட்டு நிரப்பி வருகிறது. நெடுங்காலம் விடுபட்டுப் போன, நமது முன்னேறும் பேரவா கொண்ட மாவட்டங்கள், முன்னேறிய மாவட்டங்களுக்கு இணையாக வேகமாக வளர்ந்து வருகின்றன. சமச்சீர் வளர்ச்சியை மேலும் பரவலாக்க, முன்னேறும் பேரவா கொண்ட வட்டாரங்களுக்கும், பஞ்சாயத்துக்களுக்கும், இந்த மாதிரி நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தொலைவான ஊரகப்பகுதிகளில் வசிக்கின்ற, வாய்ப்புகள் குறைவான நமது சகோதர சகோதரிகளுக்கும் சமச்சீர் நிலையையும், கண்ணியத்தையும் இது கொண்டு சேர்க்கிறது. போட்டித்தன்மை வாய்ந்த நமது வாக்கு அரசியலிலிருந்து பெரும்பாலும் விடுபட்டுப் போகும் மிகச்சிறிய சமூகங்களையும், நமது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மாதிரி அரவணைக்கிறது. நாடெங்கிலும் சிதறிக்கிடக்கும், குறிப்பாக பலவீனமான பழங்குடிக் குழுக்களைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகள், வளர்ச்சியின் ஆதாயங்களைப் பெற முடியாமல் இதுவரை இருந்தார்கள் என்பது கவலையளிக்கும் விஷயம்.
மருந்தியல் துறைகளில் தமிழ்நாடு முன்னணி:
நமது மாநிலத்திலும் கூட, இப்படிப்பட்ட சுமார் 10 இலட்சம் பேர் இருக்கிறார்கள். ஜவ்வாது மலைகள், கல்வராயன் மலைகள், நீலகிரி மலைகள் மற்றும் இதர இடங்களில் இருப்போரின் பரிதாபமான நிலையை நான் பார்த்திருக்கிறேன். இவர்களில் பல்லாயிரக்கணக்கானோரிடம் தங்கள் இருப்பை நிரூபிக்கும் அடிப்படை ஆவணங்கள் கூட இல்லை. மற்றவர்களுக்கு இணையாக இந்தக் குறிப்பிட்ட பலவீனமான பழங்குடியின மக்களை உயர்த்தி, அவர்களின் கண்ணியத்தை மீட்டெடுத்து, அவர்களின் அவலநிலையிலிருந்து மீட்கும் பணியை முதன்மையானதாக ஆக்கும் வகையில், போதுமான நிதியாதாரங்களை ஒதுக்கி, பிரதம மந்திரி ஜன்–மன் திட்டத்தைப் பிரதமர் மோடி அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
நண்பர்களே, நமது மக்களின் தொழில் முனைவு காரணமாக, நமது மாநிலம் சிறு-குறு-நுண் தொழில்கள் துறையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. ஜவுளி, தோல், வாகனங்கள், பொறியியல் பாகங்கள், மருந்தியல் துறைகளில் நமது மாநிலம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. விவசாயத் துறையில் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, நமது விவசாயிகள் விரைவாகத் தங்களைத் தகவமைத்துக் கொண்டார்கள். விவசாயத் துறையில் இணைந்து, தங்களுடைய நூதனமான எண்ணங்கள், தொழில் முனைவு காரணமாக அதில் மாற்றங்களை ஏற்படுத்தும் நமது இளைஞர்களுக்கு, நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறுதானிய வேளாண்மை, இயற்கை விவசாயம் ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் ஈடுபடத் தொடங்கியிருப்பதும், அவர்கள் வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லியைத் தவிர்த்து வருவதும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
நண்பர்களே, குறிப்பாக ஊரகப்பகுதி மற்றும் புறநகர் பின்புலத்திலிருந்து வரும் நமது தாய்மார்களும், சகோதரிகளும் மிகுந்த வினைத்திட்பத்தோடு இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் சுமார் ஒண்ணரை லட்சம் கோடி முத்ரா கடன் பயனாளிகளில், கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையினர் பெண்கள் தாம். ஊரக மாவட்டங்களுக்கு நான் சென்றிருந்த சிலவேளைகளில், அவர்களில் ஒரு சிலரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களுடைய உற்சாகம், துணிவாண்மை, நூதனங்களை உருவாக்கும் மனம் ஆகியவற்றால் நான் பெரிதும் கவரப்பட்டிருக்கிறேன். ஊரகப் பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த, வினைத்திட்பம் உடைய நமது தாய்மார்களும், சகோதரிகளும், நமது தேசத்திலும், பொருளாதாரத்திலும் மாற்ற மேற்படுத்தி வரும் அமைதியான புரட்சியாளர்கள் என்பதை ஆணித்தரமாக உரைக்கும் நம்பிக்கையை இவர்கள் எனக்கு அளிக்கிறார்கள்.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்களுடைய வியக்கத்தக்க செயல்பாடுகள் வாயிலாக, நமது மாநிலத்திற்கும், தேசத்திற்கும் பெருமை சேர்த்த நமது விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனிப்பட்ட ரீதியாகவும், குழுவாகவும் இணைந்து, மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், ஏழைகள், ஆதரவற்றவர்கள் போன்றோருக்கு, மிகத்தேவையான கவனிப்பும், ஆதரவும் அளித்துவரும் கணக்கேயில்லாத போற்றப்படாத நாயகர்களுக்கு, நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, 2047-ஆம் ஆண்டுக்குள்ளாக, முழுமையாக வளர்ச்சியடைந்த, தற்சார்புடையதாக, நமது நாட்டை ஆக்குவோம் என்ற மனமார்ந்த உறுதிமொழியை நாம் ஏற்றிருக்கிறோம். இதுவே நமது முன்னோர்களின் கனவாக இருந்தது. தங்கள் உயிராலும், உதிரத்தாலும், அந்நிய ஆட்சியிலிருந்து நமக்குச் சுதந்திரம் பெற்றுத்தந்த எண்ணற்ற உயிர்த்தியாகிகளின் கனவாகவும் இருந்தது. இதுவே வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியின் கனவாகவும் இருந்தது. இந்த தேசியக் குறிக்கோளில் எந்த சமரசமும் கிடையாது. இதை நிறைவேற்றிக் காட்டுவது நம் அனைவரின் குறிக்கோளாகும்.
தமிழ்நாடு சரிவுப்பாதையில் செல்கிறது:
இந்த தேசியக் குறிக்கோளில், நமது மாநிலமான தமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய பங்களிப்பு இருக்கிறது. இதன் வளமான திறமைகள்-திறன்களைக் காணும் போது, இதனால் நமது தேசத்தின் வளர்ச்சியின் இயந்திரமாக இருக்க முடியும். இப்படிச் செய்ய வேண்டுமென்றால், நமது மாநிலம் அதன் உச்சபட்ச திறமைக்கேற்ப மேம்பட வேண்டும். ஆனால் இது நடப்பது போலத் தெரியவில்லை. முக்கியமான குறியீடுகளின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, நமது மாநிலம் சரிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இளைஞர்கள் தாம் நமது மிக மதிப்பு வாய்ந்த சொத்துக்கள். இவர்கள் தாம் நமது எதிர்காலம். தமிழ்நாடு வளர வேண்டுமென்று சொன்னால், மிகச் சிறப்பான கல்வியும், திறன்களும் நமது இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டும். மொத்த-சேர்க்கை-விகிதத்தில், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்பது மிகுந்த நிறைவை அளிக்கிறது. ஆனால் குறிப்பாக, பள்ளிகளில் மாணவர்களின் கற்றல்-வெளிப்பாடு என்று காணும் போது, இது கடைத்தட்டில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது.
நமது அரசுப்பள்ளிகளில் இருக்கும் கற்றல் நிலை தொடர்பாக, கடந்த சில ஆண்டுகளின் கல்வி அறிக்கைகளின் வருடாந்தர நிலை, மிகவும் கவலையளிக்கும் ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறது. நமது அரசுப்பள்ளிகளில் இருக்கும் சுமார் 75 சதவீதம் மாணவர்களால், இரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகங்களைக் கூட, சரிவரப் படிக்க இயலவில்லை என்பதோடு, 11 முதல் 99 வரையிலான இரண்டு இலக்க எண்களைக் கூட, அவர்களால் அடையாளம் காண முடிவதில்லை. இரண்டு இலக்க கூட்டல்-கழித்தல்களைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை. அரசுப்பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய ஏழைகள் படிப்பதால், அரசுப்பள்ளிகளில் கற்றலில் ஏற்பட்டிருக்கும் இந்த செங்குத்தான சரிவு, ஏழைகளின் எதிர்காலத்தை மேலும் ஆபத்துக்குள்ளாக்குவதோடு, நீண்டகால சமூக மற்றும் பொருளாதார அநீதி அவர்களுக்கு இழைக்கப்படுவதை இது மேலும் அதிகப்படுத்தும்.
நண்பர்களே, உயர்கல்வியைப் பொறுத்தமட்டிலும் கூட, நிலைமை சிறப்பாக இல்லை. நமது 20 மாநில பல்கலைக்கழகங்களில், சுமார் 25 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. அவை மோசமான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன, ஆசிரியர்களுக்கு ஊதியத்தைக் கூட அவற்றால் அளிக்க முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, மாநில அரசிடமிருந்து அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதிப் பங்கீடு கிடைக்கப் பெறவில்லை. இதன் விளைவாக, பல பல்கலைக்கழகங்கள், 50 சதவீதத்திற்கும் குறைவான ஆசிரியர்களின் எண்ணிக்கையோடு செயல்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் சேர்க்கைக்குத் தேவையான நிதி பல்கலைக்கழகங்களிடம் இல்லை. நமது தேசத்தின் பெருமிதமாக விளங்கிய சென்னை பல்கலைக்கழகத்தில், 66 சதவீத ஆசிரியர் பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அரசாங்க நிதி, தொடர்ந்து கிடைக்காத காரணத்தால், சில பல்கலைக்கழகங்கள் தங்களுடைய வருமானவரி அறிக்கைகளில், தங்களை மாநில அரசுசாரா பல்கலைக்கழகங்களாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
தரம் தாழ்ந்த பாடத்திட்டம்:
பத்து பல்கலைக்கழகங்கள் பல ஆண்டுகளாகவே பதிவாளர்களும், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்களும் இல்லாமல் இருக்கின்றன. அவை தற்காலிக அடிப்படையில் இயங்கி வருகின்றன. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி முறை எந்த அளவுக்குத் தீவிரமாக அழிக்கப்பட்டு விட்டது என்றால், அவற்றை பல்கலைக்கழக மாமன்றக்குழு அல்ல, மாநில தலைமைச் செயலகமே அவற்றை நிர்வாகம் செய்கின்றன. பல்கலைக்கழகக் கல்விக்குழுவின் ஆளுமையின்கீழ் சட்டபூர்வமான வகையிலே வரக்கூடிய பாடத்திட்டத்தை அமைக்கும் குழு விஷயத்தில், மாநில அரசின் உயர்கல்விக் குழு தயாரித்தளிக்கும் தரம் தாழ்ந்த பாடத்திட்டத்தையே பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன.
நேர்மையான, அப்பழுக்கற்ற பல்கலைக்கழக அதிகாரிகள், பொய்யான, புனையப்பட்ட வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு, காவல்துறையின் அவமானகரமான உளைச்சலுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். துணைவேந்தர்கள் இல்லாமை, பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகிறது; ஏனென்றால், உயர்கல்வித் துறையின் செயலர் அப்போது நடைமுறையில் துணைவேந்தராகிறார். ஏற்கமுடியாத, அற்பமான காரணங்களுக்காக, துணைவேந்தர்கள் நியமனத்தை நடக்க இயலாமல் செய்வது என்பது, பின்வாயில் வழியே பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அதிகாரத்தைச் சிதைக்கும் தவறான வழியாகும்.
இதையும் படிங்க: ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்து...தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!
இதனால் நிகர விளைவு கல்வித்தரத்தில் ஏற்பட்டிருக்கும் செங்குத்து வீழ்ச்சி. இத்தகைய வீழ்ச்சி காரணமாக, மேலும் மேலும் பலபட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காமை; ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோர் பணிக்கமர்த்தமுடியா நிலையில் உள்ளார்கள். ஆய்வுகளின் பொதுவான தர நிலைகள் மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நமது பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் 6,000-த்திற்கும் மேற்பட்ட முனைவர்களில், 5 சதவீதம் பேரால் கூட, தேசியத் தகுதித்தேர்வு-NET, அல்லது இளநிலை ஆய்வு மாணவர் நிலை-JRF-க்கான குறைந்தபட்ச ஆய்வுத் தரத்திற்குத் தேர்ச்சி பெற முடியவில்லை. பல மில்லியன் மாணவர்களின் எதிர்காலம் அபாயத்தில் இருக்கிறது.
போதைப்பொருள் அபாயம்:
நண்பர்களே, கல்வி நிறுவன வளாகங்களைச் சுற்றி நிலவும் சட்டவிரோதமான போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரமான கவலையை அளிக்கிறது. சர்வதேச போதைப்பொருள் கூட்டமைப்புகளோடு தொடர்புடைய, சக்தி வாய்ந்த போதைப்பொருள் கும்பல்கள் நமது மாநிலத்தில் இயங்கி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்கும் போது, அடிமட்டத்தில் இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோர், சில வேளைகளில் அமலாக்கப் பிரிவுகளால் பிடிக்கப்பட்டாலும், போதைப்பொருள் கூட்டமைப்புக்களை இயக்கி வரும் பெரும்புள்ளிகள் தொடப்படுவதில்லை. போதைப்பொருள் கூட்டமைப்புக்களின் முக்கியப்புள்ளிகள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படவில்லை என்று சொன்னால், பெருகி வரும் போதைப்பொருள் அபாயம், நமது எதிர்காலச் சந்ததிகளை அழித்துவிடும்.
நண்பர்களே, நமது தாழ்த்தப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு எதிரான, மனிதாபிமானமே இல்லாமல் இழைக்கப்படும் சமூகப்பாகுபாடுகள் பற்றிய செய்திகளை, ஒவ்வொரு நாளும் நாம் படிக்கும் போது, நமது இதயம் குன்றி, தலை அவமானத்தால் தாழ்ந்து போகிறது. தங்கள் காலணிகளை அணிந்து கொண்டு கிராமத் தெருக்களில் நடக்க அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, பொது இடங்களில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்தப் பாகுபாட்டிற்கு எதிராக, அவர்களில் யாரேனும் தட்டிக்கேட்டால், அவர்கள் கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள், அவர்கள் மீது சிறுநீர் கழிக்கப்படுகிறது, சிலவேளைகளில் அவர்கள் கொலையும் செய்யப்படுகிறார்கள்.
பள்ளி வகுப்பறைகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனிப்படுத்தப்படுகிறார்கள்; தாழ்த்தப்பட்ட மாணவர் யாரேனும் கல்வியில் சிறப்பாகச் செயல்பட்டால், அவர் தாக்கப்படுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பஞ்சாயத்துத் தலைவர் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை என்பதோடு, அதிகாரபூர்வமான கூட்டங்களில் அவர் நாற்காலியில் அமரக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள், தமிழ்நாட்டில் சீராக அதிகரித்து வருகின்றன.
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொடுமைகள்:
ஒருபுறம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் வேளையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கவும்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றத்தீர்ப்பு, தேசிய சராசரியில் பாதியளவே இருக்கிறது. 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில், மிகப்பெரிய கள்ளச்சாராய பெருந்துயர்கள், மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சுமார் 100 மனிதர்கள் இறந்தார்கள், பலநூறு குடும்பங்கள் கள்ளச்சாராயத்தால் நிலைகுலைந்து போயின.
ஏழை மக்களின் மரணத்திலும், அழிவிலும் இலாபம் அடையும் கள்ளச்சாராயத்தின் பெருமுதலைகள் சுதந்திரமாக இருக்கும் அதேவேளையில், கீழ்மட்டத்தில் இருக்கும் கையாட்கள் சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையையே சமூகநீதியை நிலைநிறுத்த அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மாபெரும் தலைவர்கள் பற்றிப் பெருமிதம் கொள்ளும் மாநிலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன.
நண்பர்களே, சில ஆண்டுகள் முன்பு வரை, தனியார் முதலீட்டாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட மாநிலமாக நமது மாநிலம் இருந்தது. ஆனால் இன்று முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை விடுத்து மற்ற மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். 2021-22 ஆம் நிதியாண்டில், மாநிலங்களிலேயே அந்நிய நேரடி முதலீட்டை அதிக அளவில் ஈர்த்த 4-ஆவது மாநிலமாக தமிழ்நாடு இருந்ததோடு, 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவு முதலீட்டைப் பெற்றது. 2023-24 ஆம் ஆண்டில் நமது மாநிலம் 6-ஆவது நிலைக்கு வீழ்ச்சி கண்டதோடு, 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவே முதலீட்டைப் பெற்றது.
அதேவேளையில், கர்நாடகம் 6.5 பில்லியன் டாலர் அளவும், குஜராத் 7.3 பில்லியன் டாலர் அளவும், மஹாராஷ்டிரம் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவும் முதலீடுகளை ஈர்த்தன. தெலங்கானாவும், ஹரியாணாவும் ஒருகாலத்தில் நமக்கு அடுத்த நிலையில் இருந்தார்கள்; ஆனால் இப்போது அவர்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறிவிட்டார்கள். குறைந்து வரும் தனியார் முதலீடுகள், தொழில்கள் மற்றும் சேவைத்துறைகளின் வேகத்தைக் குறைத்திருக்கிறது. இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்பிற்கும் பாதகமான விளைவுகளை உண்டாக்கும். முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் காரணங்களை நாம் அகற்றியாக வேண்டும்.
தற்கொலைத் தலைநகரம்:
நண்பர்களே, ஒரு சமூகத்தில் நடக்கும் தற்கொலைகள் தாம் அதன் சமூக மற்றும் பொருளாதாரத் துயரின் அளவுகோல். நாட்டிலேயே மிக அதிக தற்கொலை வீதம் உடைய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு சராசரி 12 தற்கொலைகள் என்பது தேசிய சராசரி. நமது மாநிலமான தமிழ்நாட்டிலோ, ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு 26-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் என்ற நிலை இருக்கிறது. இது தேசிய சராசரியை விட இருமடங்கிற்கும் அதிகமானது.
நமது மாநிலத்தில் சுமார் 20,000 பேர்கள் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழ்நாடு தான் இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்கிறார்கள் தரவு ஆய்வாளர்கள். பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், ஏழைகள். தீவிரமான சமூக மற்றும் பொருளாதாரத் துயர் நிறைந்த சூழல், வளர்ச்சிக்கும் நீதிக்கும் எதிரானது. இதில் விரிவான உடனடி இடையீடு தேவைப்படுகிறது.
நண்பர்களே, தேசிய புலனாய்வு முகமை-NIA எனும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய முகமை, நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தீவிரவாத வலையமைப்புக்களின் அலகுகளையும், இரகசியமாகச் செயல்படும் தீவிரவாதிகளையும் அவ்வப்போது கண்டுபிடித்து செயலிழக்கச் செய்து வருகிறது. இவற்றில் சில தீவிரவாத அலகுகள், ஆஃப்கனிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளில் இயங்கி வரும் சர்வதேச தீவிரவாத வலையமைப்புக்களோடு தொடர்பு கொண்டவை. தேசிய பாதுகாப்பு பற்றிய மிகமிகத் தீவிரமான கவலையை அளிக்கும் விஷயம் இது. இது நமது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, நமது பொருளாதாரத்தைக் கடுமையாகத் தகர்க்கக்கூடிய திறன் கொண்டது. மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும், அமலாக்க முகமைகள் தீவிரத்தோடு அவர்களைக் களையெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அரசியலமைப்புச் சட்டம்:
நண்பர்களே, 2047-லே வளர்ச்சியடைந்த பாரதமாக ஆகும் பாதையில் நமது தேசம் தன்னம்பிக்கையோடு பயணிக்கும் வேளையிலே, உள்நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி, சில சுயநலமிகளும், எதிரிசக்திகளும் நமது முன்னேற்றத்தின் வேகத்தைக் குலைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இனம், சமயம், மொழி, சாதிகளின் பெயரால் நமது சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, அதைச் சிதைக்க முயற்சி செய்கிறார்கள். தவறான, எதிர்மறை கூற்றுகள் வாயிலாக, நமது மக்களின் நெஞ்சுரத்தை பலவீனப்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதும், அரசியல் சட்டபூர்வமாக நிறுவப்பட்ட அமைப்புகளின் மீதும், நமது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பொய்யான கருத்துரைகளைப் பரப்பி வருகிறார்கள். இத்தகைய தேசவிரோதக்கூறுகளுக்கு எதிராக, விழிப்போடு இருக்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடமும் நான் வலியுறுத்துகிறேன்.
நண்பர்களே, பாரதத்தின் அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆன வேளையை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இது ஓராண்டுக்காலக் கொண்டாட்டம். இதில் அனைவரும் சுறுசுறுப்போடு பங்கெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நமது கனவுகள், நமது சிந்தனைகள், நமது இலக்குகள் அனைத்துமே நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்றன. நமது உரிமைகளும், கடமைகளும் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்றன. நாம் சென்று சேருமிடமும், திசைகளும் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு இந்தியருக்கும், அனைத்திலும் மிகமிகப் புனிதமான புத்தகமாகும் இது. இது இந்திய மக்களாகிய நம் அனைவருக்கும் சொந்தம். இதை நாம் மீட்டெடுப்போம், உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் நாம் கொண்டாடுவோம்,"
இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.