சென்னை: நடிகர் அஜித் குமார், நடனக் கலைஞரும் நடிகையுமான ஷோபனா சந்திரகுமார் மற்றும் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோருக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக இவ்விருது நடிகர் அஜித் குமார், ஷோபனா இருவருக்கும் வழங்கப்படுகிறது.
நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம பூஷன் உடன் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் என மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிட்ட சாதனைகளை புரிந்தவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
இதில், தமிழ்நாட்டை சேர்ந்த மொத்தம் 13 பேருக்கு இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலைச்சர் மு.க.ஸ்டாலின் விருது பெரும் நபர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசின் #PadmaBhushan விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் திரு. அஜீத்குமார், திரு. நல்லி குப்புசாமி, திருமிகு ஷோபனா சந்திரகுமார் ஆகிய மூவருக்கும்; #PadmaShri விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு. @ashwinravi99, திரு. குருவாயூர் துரை, திரு. தாமோதரன்,…
— M.K.Stalin (@mkstalin) January 25, 2025
இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில், "தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசின் பத்ம பூஷன் (Padma Bhushan) விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் அஜித் குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திரகுமார் ஆகிய மூவருக்கும்; பத்ம ஸ்ரீ (Padma Shri) விருதுக்குத் தேர்வாகியிருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லக்ஷ்மிபதி ராமசுப்பையர், எ.டி. ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஆர்.ஜி. சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். தத்தமது துறைகளில் தாங்கள் மென்மேலும் உயரங்களை அடைய வேண்டும், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.