மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் பறை இசை வேல்முருகன் என்ற வேலு ஆசான். தனது தந்தை ராமையாவிடம் இருந்து பறை இசையைக் கற்றுக் கொண்ட வேலு ஆசான், பறை மீது கொண்ட ஆர்வம் காரணமாக கல்வியில் வேண்டா வெறுப்பாகவே அவரது கவனம் சென்றது. தந்தை ராமையா திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து ஊருக்குத் தெரிவிப்பதற்காக பறையைத் தொழில் முறையில் மேற்கொண்டார். தனது மகன் கல்வி கற்று உயர்நிலைக்குச் செல்ல வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தாலும், நடந்தது என்னவோ அதற்கு நேர்மாறானது.
தந்தையோடு சம காலத்தில் பறையிசைத்த சேவுகன் வாத்தியாரிடம் பறையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டதாக பல்வேறு சமயங்களில் வேலு குறிப்பிட்டுள்ளார். தன்னோடு பயின்ற பிற கலைஞர்கள் பறையைத் தொழிலாகப் பார்த்த நிலையில், அதைக் கலையாகவும், மக்களுக்கான இசையாகவும் உணர்ந்து, அதனை அனைவருக்கும் பயிற்றுவித்து, கலையை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதில் தணியாத தாகம் கொண்டிருக்கிறார்.
வேலு ஆசானிடம் கலை கற்றுக் கொண்ட மதுரை மாவட்டம் ஆனையூரைச் சேர்ந்த பறையிசைக் கலைஞர் தங்கப்பாண்டியன் கூறுகையில், 'தமிழ்நாட்டின் பறை கலைக்காகவே வாழுகின்ற குறிப்பிட்ட ஒரு சிலரில் வேலு ஆசானும் ஒருவராவார். மற்ற கலைஞர்கள் எல்லாம், கூடுதலாக கட்டக்கால், கரகம், ஒயில் எனக் கற்றுக் கொண்டு அதனை தொழில் முறையில் நிகழ்த்தி வரும் நிலையில், வேலு ஆசான், பறையிசைக்காக மட்டுமே தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் தவறாது வேலு ஆசானின் பறை நிகழ்ச்சி இடம் பெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அங்கு பறை நிகழ்ச்சி தமிழக முதல்வரிடம் பாராட்டுப் பெற்றார். சீனா, சிங்கப்பூர், துபாய், மலேசியா, அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கெல்லாம் உள்ள தமிழர்களுக்கு பறையிசையின் பெருமையைப் பறைசாற்றி வருகிறார். அவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது, என்னைப் போன்ற கலைஞர்களுக்கே கிடைத்ததைப் போன்று பெருமை கொள்கிறோம்' என்றார்.
இசை, மக்களுக்கானது. வெவ்வேறு மனநிலை கொண்ட மனித இனத்தையும் பூமியின் சமநிலையையும் இணைக்கும் பாலம் தான் ஒலி. மனிதனின் முதல் மொழியும் ஒலி தான். இயற்கை மனிதனை உருவாக்கியது. மனிதன் ஒலியை உருவாக்கினான். ஒலி மொழியை உருவாக்கியது. மொழி இசையை உருவாக்கியது.
பல ஒலிகளின் கூட்டமைப்பை தான் இசை என்கிறோம். மனிதன் தான் வாழும் இடத்திற்கேற்ப மொழிகள் மாறுபட்டன. மொழிகள் மாறினாலும் இசை மாறாது. இசை, மக்களுக்கே உரிய பொக்கிஷம். இசையில் சிறந்தது நம் தமிழிசையே ஆகும். அப்படிப்பட்ட இசையோடு தான் நாம் பயணிக்கிறோம் என்பதை தனது வாழ்வியல் முழக்கமாகவே கொண்டு தனது 'சமர்' என்ற கலைக்குழு மூலம் இயங்கி வருகிறார் வேலு ஆசான்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே நடைபெறும் நிகழ்ச்சியொன்றில் தலைமை விருந்தினராகப் பங்கேற்பதற்கு செல்லும் வழியில், மதுரை ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த வேலு ஆசானிடம், பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்காக ஈடிவி பாரத் சார்பாக வாழ்த்து தெரிவித்தோம்.
பிறகு நம்மிடம் மனம் விட்டுப் பேசிய வேலு ஆசான், 'அலங்காநல்லூரில் நான் 5-ஆவது படிக்கும்போத முழு ஆண்டுத் தேர்வு சமயம், ஓராண்டிற்குப் பிறகு எங்கள் ஊரில் கோவில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது சாமி சிலைக்கு அருள் ஏற்றுவதற்காக பறை இசைத்துக் கொண்டிருந்தார்கள். ஊர் மக்களோடு சேர்ந்து நானும் அந்த இசையை ரசித்துக் கொண்டிருந்தேன். என்னையும் அறியாமல் அருள் வந்து ஆட ஆரம்பித்தேன். சேவுகன் வாத்தியார் என்ற பறைக் கலைஞர் என்னிடம் பறையைக் கொடுத்து 'அடிடா' என இசைக்கச் சொன்னார்.
நான் பறை இசைக்கும் திறமையைப் பார்த்து சேவுகன் வாத்தியார், பிறப்பு, இறப்பு, திருமணம், கோவில் திருவிழா என அனைத்திற்கும் என்னை அழைத்துச் செல்லத் தொடங்கினார். இதனால் என்னை வீட்டில் யாரும் மதிக்கவில்லை. பறை பற்றி எதுவும் தெரியாத காலத்திலேயே எனக்கு அதன் மீது நாட்டம் ஏற்பட்டதற்குக் காரணம் இறைவன்தான்.
என்னைப் பொறுத்தவரை பறைதான் என்னுடைய கடவுள், இறை எல்லாம். அதற்குப் பிறகு பல்வேறு இடையூறுகள் எனக்கு ஏற்பட்டாலும், பறை இசையின் வரலாற்றோடு கலையை முழுவதுமாகக் கற்றுக் கொண்டேன். தோல் பறைதான் நமது மரபுக்கலை. அதைத்தான் இன்றுவரை இசைத்து வருகிறேன். அதை ஒருபோதும் அழித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
மதுரை இறையியற் கல்லூரி சார்பாக நடைபெறும் தலித் கலை விழாவில் 'அழகர்சாமி' விருதுதான் எனக்குக் கிடைத்த முதல் விருது. சீனா உட்பட பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளேன். அண்மையில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடைபெற்ற ஆயிரம் பறைகள் என்ற கின்னஸ் சாதனைக்காக பறை நிகழ்த்தினேன்.
இதேபோன்று கோயம்புத்தூரிலும் நடைபெற்ற சாதனை நிகழ்வொன்றில் பங்கேற்றேன். பல்வேறு பறையிசைப் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்றுள்ளேன். பல்வேறு திரைப்படங்களிலும் தோன்றியிருக்கிறேன். தர்மதுரை படத்தில் 'மக்க கலங்குதப்பா... மடி புடிச்சு இழுக்குதப்பா...' பாடலில் நடிகர் விஜய் சேதுபதி 'ஆசான்' என்று என்னைத்தான் முதலில் கட்டித்தழுவுவார். அதேபோன்று 'கும்கி' படத்தில் வரும் 'சொய்ங்... சொய்ங்...' என்ற பறையிசை என்னுடையதுதான்.
எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு என்னுடைய மாணவர்கள் தமிழகம் முழுவதும் உள்ளனர். இதில் பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன்கள் வரை நான் பார்த்துவிட்டேன். உலகம் முழுவதும் சென்று நம் தமிழர்களுக்குக் கற்றுக் கொடுப்பதோடு, தற்போது இணையவழியிலும் அவர்களுக்கு கற்றுத் தருகிறேன்.
தற்போது எனக்கு மத்திய அரசு வழங்கியுள்ள 'பத்மஸ்ரீ' விருதை எனது குருநாதன் சேவுகன் வாத்தியாருக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் பறையையும் அந்தக் குச்சியையும் என்னிடம் வழங்காமல் விட்டிருந்தான் இன்றைக்கு நான் வேலு ஆசான் கிடையாது. சென்னை சங்கமம் மூலமாகத்தான் நான் உலக நாடுகளுக்கு அறிமுகமானேன் என்பதில் எனக்குப் பெருமை உண்டு' என்றார்.