சென்னை: தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் 14 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக, சென்னையில் வசித்து வருபவர்கள், சென்னையில் தங்கி பணிபுரிபவர்கள், கல்லூரிகளில் படித்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், சொந்தக்காரர்கள் வசிக்கும் ஊர்களுக்கும் நேற்று மாலை முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் மூலம் செல்ல தொடங்கி உள்ளனர்.
மேலும், வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக 14,000-க்கும் அதிகமான பேருந்துகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளில் ஒரே நேரத்தில் பயணிப்பதால், சென்னை அடுத்த தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வண்டலூர், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மாற்று சாலையில் போகலாம்
தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையிலிருந்து புறப்படும் மக்கள் வண்டலூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்துமாறும், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையை பயன்படுத்தி செங்கல்பட்டு சென்று அங்கிருந்து அவர்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்லலாம் எனவும் போக்குவரத்து காவல்துறையினர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் - வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பலர் ஒரே நேரத்தில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், சாரை சாரையாக செல்வதால், வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து வெளிவட்ட சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளன.
திணறும் வண்டலூர்
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனால் கார், வேன், பேருந்துகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நகர்ந்து வருகிறது. வண்டலூர் - மீஞ்சூர் பைபாஸ் சாலை, தாம்பரம், பெருங்களத்தூர் வண்டலூர், கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் பணியில் இருந்து போக்குவரத்தை சீர் செய்து வந்த போதிலும் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வருவதால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
மேலும், பெருங்களத்தூர் இரும்புலியூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆமை வேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. எனவே, சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு சொந்த வாகனங்களில் செல்லும் மக்கள் தங்களுடைய பயண நேரத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரமாக பார்த்து புறப்பட்டு செல்லுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
ஜெனெரல் பெட்டிகளில் முட்டிமோதும் மக்கள்
அதேபோல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு நிரம்பி விட்டதால், முன்பதிவு இல்லா ரயில் பெட்டிகளில் மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு ஏறி செல்கின்றனர். குறிப்பாக தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து, தென் மாவட்டங்கள் செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.
கன்னியாகுமரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்து ஏறிக்கொண்டு பயணம் செய்கின்றனர். இதனால் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை பாதுகாப்பாக ரயிலில் ஏற்றி அனுப்பி வருகின்றனர்.