தூத்துக்குடி: தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியர்களில் ஒருவராக அறியப்படுபவர் பா. விஜய். பாடலாசிரியராக மட்டுமல்லாமல் நடிப்பு, வசனகர்த்தா, இயக்கம் என பன்முகங்களைக் கொண்டவராக வலம் வருகிறார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பா. விஜய் சாமி தரிசனம் செய்துள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
அது மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்து முருகனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினம் (பிப்.19) நடிகரும் திரைப்பட பாடலாசிரியருமான பா.விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்து சுப்ரமணிய சாமியை வழிபட்டார்.
1996ஆம் ஆண்டில் ’ஞானப்பழம்’ படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான பா.விஜய் 2004ஆம் ஆண்டு ’ஆட்டோகிராப்’ திரைப்படத்தில் தான் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக, சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். முப்பது ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த பா.விஜய் தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். அது மட்டுமல்லாமல் ’ஸ்ட்ராபெர்ரி’, ’ஆரூத்ரா’ எனும் இரு படங்களை இவரே நடித்து இயக்கினார். தற்போது மூன்றாவதாக ’அகத்தியா’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் தான் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தந்துள்ளார் பா.விஜய். கோவிலுக்குள் சென்ற அவர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த பாடலாசிரியர் பா.விஜயுடன் பக்தர்கள், பொதுமக்கள் நின்று புகைப்படம் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் பேசும் ஜாக்கிசான்... ’கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ தமிழ் போஸ்டர் வெளியீடு!
ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா, யோகிபாபு, ஐரோப்பிய நடிகை மெடில்டா என பலர் நடித்துள்ள ’அகத்தியா’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஹாரார் பேண்டஸி ஜானரில் நமது முன்னோர்களின் பெருமையை அறிவையும் உலகுக்கு எடுத்துச் சொல்லும் படமாக ’அகத்தியா’ இருக்கும் என பா.விஜய் படம் குறித்து தெரிவித்திருந்தார்.
நடிப்பு, இயக்கம் என பல வேலைகள் செய்து வந்தாலும் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தில் பாரா பாடலை நேசிப்பாயா திரைப்படத்தில் மூன்று பாடல்களையும் பா.விஜய் எழுதியுள்ளார்.