பாரீஸ்: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் செல்கிறார். அப்போது அங்கு நடைபெறும் AI உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்வார் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
“பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் AI உச்சி மாநாட்டை பிரான்ஸ் நடத்துவுள்ளது. இது செயல்பாட்டிற்கான உச்சி மாநாடு, இது செயற்கை நுண்ணறிவு பற்றி விவாதிக்க எங்களுக்கு உதவும்,” என்று மேக்ரான் கூறினார். “பிரான்ஸ் நடத்தும் இந்த AI உச்சி மாநாட்டில் IEA, அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்." என்றும் அவர் கூறினார்.
பிப்ரவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் உச்சி மாநாடு நடைபெறும் என்று மேக்ரான் கூறியிருக்கும் நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் பிரான்ஸ் தூதர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், 2025 ஆம் ஆண்டிற்கான பிரான்ஸின் வெளியுறவுக் கொள்கையை முன்வைத்தார். மேலும், அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு பிறகான அமெரிக்காவின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து இம்மானுவேல் மேக்ரான் விரிவாக எடுத்துரைத்திருந்தார்.
இதற்கு முன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, பிரான்ஸ் அதிபர் மேக்ரன் கடந்த ஆண்டு நவம்பர் 18 அன்று பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த G20 உச்சிமாநாட்டின் போது சந்தித்தார். அதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஜனவரியில் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு தலைமை விருந்தினராக மேக்ரான் இந்தியா வந்திருந்தார். மேலும், 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியில் நடந்த G7 உச்சிமாநாட்டின் போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். இப்படியாக, கடந்த ஒரே ஆண்டில் இரு நாட்டு தலைவர்களும் 3 முறை சந்தித்துள்ளனர்.
நவம்பர் 2024 சந்திப்பின் போது, இரு தலைவர்களும் இந்தியா-பிரான்ஸ் பரஸ்பர கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
“டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகள், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்துவதையும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மையையும் இரு தலைவர்களும் பாராட்டினர்,” என்று வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறியது, “இந்த சூழலில், பிரான்சில் வரவிருக்கும் AI செயல் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான அதிபர் மேக்ரானின் முயற்சியை பிரதமர் மோடி வரவேற்றார்,” என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
"பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரான்சின் AI செயல் உச்சி மாநாடு, ஐரோப்பாவை 'முன்னணி AI கண்டமாக' முன் வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று ஐரோப்பிய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.