கேரளா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த தற்போது 18 வயதான விளையாட்டு வீராங்கனை சிறுமிக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமி நேற்று (ஜன.10) வெள்ளிக்கிழமை புகார் அளித்த பின்னே இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இந்த வழக்கில் 6 பேரைக் கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த சிறுமி பயின்று வந்த கல்வி நிறுவனத்தில் உள்ள ஆசிரியர்கள், சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட குறிப்பிட்ட மாற்றங்கள் குறித்து நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், குழந்தைகள் நலக் குழு (Child Welfare Committee) நடத்திய கவுன்சிலிங்கில், அச்சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, குழந்தைகள் நலக் குழு பெற்ற அறிக்கையை, பத்தனம்திட்டா காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
40 பேர் மீது வழக்குப் பதிவு:
அந்த புகாரைப் பெற்ற போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில், 40 நபர்கள் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ், எலவும்திட்டா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த அந்த சிறுமியின் வாக்குமூலத்தின் படி, விளையாட்டுப் பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் உடன் பயிலும் நண்பர்கள் உள்ளிட்டோர் இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
6 பேர் கைது:
இந்த நிலையில், சிறுமி மைனராக இருந்த போது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட, சுபின் (24), எஸ்.சந்தீப் (30), வி.கே.வினீத் (30), கே.ஆனந்து (21), மற்றும் ஸ்ரீனி என்ற எஸ்.சுதி ஸ்ரீனி (24) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இதில் தொடர்புடைய அச்சு ஆனந்த் (24) என்பவர் ஏற்கனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதும், இவர்கள் அனைவரும் நேற்று (ஜனவரி 10) காலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... தலைமை ஆசிரியர் கைது!
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நேற்று இரவே மாஜிஸ்திரேட் ராணி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கூடுதல் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் பெண் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாலியல் புகாரை விசாரணை செய்ய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.