புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றும் வேதியியல் ஆசிரியர், அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் பள்ளியை சூறையாடியதோடு, ஆசிரியரை சரமாரியாகத் தாக்கி சாலையில் இழுத்துச் சென்றனர். இந்த நிலையில், நேற்று (பிப்.14) ஆசிரியரைக் கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:
புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு (வயது 6) படிக்கும் சிறுமி, அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பிற்கு வேதியியல் பாடம் (Chemistry) கற்பிக்கும் ஆசிரியர் மணிகண்டனால் பாலியல் வன்புணர்வு ஆளாக்கப்பட்டுள்ளார். அதனால், சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
![எஸ்பி-யை சந்தித்து தீர்மான நகலை வழங்கிய கிராம மக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/23548349_p.jpg)
அப்போது, மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் பரிசோதனை செய்து பார்த்த போது, சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரிய வந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, "நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன்" என சிறுமி அழுது அடம்பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறுமியிடம் பொறுமையாகக் கேட்டபோது, இந்த உண்மை அம்பலமாகியுள்ளது.
பள்ளியை சூறையாடிய உறவினர்கள்:
பின்னர், சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் நியாயம் கேட்டுள்ளனர். அப்போது, வேதியியல் ஆசிரியர் மணிகண்டன் தான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் எனக் கூறியதோடு, சிறுமி அவரை அடையாளமும் காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரத்தில் தனியார் பள்ளியை சூறையாடினர். அதனைத் தொடர்ந்து, பள்ளிக்கு வெளியே சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதனால், கடலூர் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து வந்த போலீசார் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் மீது தாக்குதல்:
இதற்கிடையே, பெற்றோர் புகார் அளித்தும் காவல்துறையினர் போக்சோ வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை சூறையாடியதோடு, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரை சரமாரியாகத் தாக்கி, சாலையில் ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால், புதுச்சேரி மற்றும் கடலூர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ஆசிரியர் போக்சோவில் கைது:
அதன் பின்னர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்து அழைத்துச் சென்றனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த சம்பவம் தொடர்பாக பதிலளிக்க நிர்வாகம் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சோளிங்கரில் 6 பேரை கடித்த வெறிநாய்.. பொதுமக்கள் அச்சம்!
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியை தற்காலிகமாக மூட உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், அந்த பள்ளியின் தாளாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
போராட்டம் நடத்த 18 கிராம மீனவ மக்கள் தீர்மானம்:
இந்த நிலையில், பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்காவிட்டால் புதுச்சேரி முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும், பள்ளி நிர்வாகத்தினர் மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றிய 18 கிராமத்தைச் சேர்ந்த மீனவ கிராம மக்கள், இன்று (பிப்.15) எஸ்பி முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றிய அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.