சென்னை: புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் போது செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு மக்கள் மத்தியில் அரசியல் நோக்கத்தோடு ஹிந்தியை எதிர்க்கிறது. இவ்வாறு ஹிந்தியை எதிர்ப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது இல்லை. புதிய கல்வி கொள்கையின் மும்மொழி கொள்கையை அரசியல் சாசன விதிமுறைப்படி நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
ஆனால், தமிழ்நாடு மட்டுமே அரசியல் நோக்கமாக இந்த கல்வி கொள்கையை எதிர்க்கிறது. மத்திய அரசு எந்த மாநிலங்களையும் தாய்மொழியை மறந்து ஹிந்தியை கற்றுக்கொள்ள சொல்லவில்லை. இந்தியாவில் ஹிந்திதான் முதன்மையான மொழியாக உள்ளது. இந்த கருத்தை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், தமிழ்நாடு அரசு மக்களை குழப்புகின்றனர். அரசியல் காரணங்களை வைத்து புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
இவ்வாறு அமைச்சர் கூறியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி உளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தற்போது தவெக தலைவர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும்.
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
— TVK Vijay (@TVKVijayHQ) February 16, 2025
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம்…
நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
இதையும் படிங்க: “திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்கும்” - முதலமைச்சரின் அதிரடி பதில்!
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறை. இந்த ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.