புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தை எதிர்த்த வழக்கின் மீது மார்ச் 19ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜனநாயக மறுசீரமைப்புக்கான அமைப்பு என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணிக்கான நிபந்தனகள், பதவி காலம்) சட்டம் 2023-ன் கீழ் புதிய தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் ஆகியோர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுவிட்டனர். எனவே இன்றைக்கு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. விசாரணைக்காக நீண்டநேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது,"என்று கேட்டுக் கொண்டார்.
எனினும் நீதிபதிகள், இந்த வழக்கை மார்ச் 19ஆம் தேதிக்கு முன்னதாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறினர்.
முன்னதாக மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துசார் மேத்தா, நான் அரசியலமைப்பு சட்ட அமர்வின் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருப்பதால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும்,"என்று கேட்டுக் கொண்டார்.

உடனே குறுக்கிட்ட பிரசாந்த் பூஷண், "மத்திய அரசுக்கு ஆஜராவதற்காக உச்ச நீதிமன்றத்தில் 17 வழக்கறிஞர்கள் உள்ளன. எனவே துசார் மேத்தா ஆஜராக முடியாது என்பதற்காக மட்டும் இந்த வழக்கை தள்ளி வைக்கக் கூடாது," என்று வாதிட்டார்.
முன்னதாக பிரசாந்த் பூஷண் நேற்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து முறையிட்டபோது நாளை (பிப்ரவரி 19) விசாரிப்பதாக நீதிபதிகள் கூறினர். இப்போது இந்த வழக்கு வரும் மார்ச் 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். இந்த வழக்கில்தான் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இதற்கு மாறாக மத்திய அரசு, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணிக்கான நிபந்தனகள், பதவி காலம்) சட்டம் 2023 என்ற சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி நியமனக் குழுவில் பிரதமர், மத்திய அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவர் இடம் பெறுவர் என்று கூறப்பட்டது. இதனால், ஆளும் கட்சியின் ஆதிக்கத்தின் பேரில் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்க்கட்சிகள் கூறின.
இந்த நிலையில் மத்திய அரசின் சட்டத்தின்படி புதிய தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் நியமிப்பதற்கான தேர்வு குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டபடி ஞானேஷ் குமார் புதிய தலைமை தேர்தல் ஆணையராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று பதவி ஏற்றார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்தார். இந்த நிலையில்தான் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.