சென்னை: புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடித்ததில் கூறியிருப்பதாவது:
"மாநில அரசுகள் கல்வி விவகாரத்தில் அரசியலை தவிர்த்து, கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மாணவர்களின் அறிவு, திறன், மற்றும் எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை 2020 சீர்திருத்தம் மட்டும் இல்லாமல் உலக அளவில் இந்திய கல்வி அமைப்பை மேம்படுத்தும் விதமாகவும், கலாச்சார பன்முகத்தன்மையை மேம்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2022ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி சென்னை வந்த போது, தமிழ் மொழியின் உலக அளவில் சிறந்து விளங்குவது குறித்து பேசியுள்ளார். பிரதமர் மோடி வலியுறுத்தலின் பேரில் காசி தமிழ்ச் சங்கமம் மற்றும் சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது. கடந்த 2022இல் காசி தமிழ்ச் சங்கமத்தின் போது, பிரதமர் மோடி 13 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார்.
அதே போல் திருக்குறள் நூல் 15 மொழிகளிலும், 46 இலக்கிய நூல் புத்தகங்கள் 118 பகுதியாகவும் பிரதமர் மோடியால் காசி தமிழ்ச் சங்கமத்தில் வெளியிடப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமத்தில் 41 சிறந்த தமிழ் இலக்கியங்கள் மத்திய தமிழ் பல்கலைகழகம் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு, நானும், உத்தரப்பிரதேச முதல்வரும் வெளியிட்டோம்.
Highly inappropriate for a State to view NEP 2020 with a myopic vision and use threats to sustain political narratives.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) February 21, 2025
Hon’ble PM @narendramodi ji’s govt. is fully committed to promote and popularise the eternal Tamil culture and language globally. I humbly appeal to not… pic.twitter.com/aw06cVCyAP
இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தில் சித்தா மருத்துவம் மற்றும் தமிழ் இலக்கியத்தில் அகஸ்தியரின் பங்கு முக்கிய பகுதியாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட அனுவதினி மற்றும் பாஷினி ஆகிய கருவிகள் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளுக்கு உடனடியாக மொழிபெயர்ப்பு செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறையில் முக்கிய போட்டித் தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மேலும் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணத்தின் போது, இந்தியாவின் திருக்குறள் கலாச்சார மையத்தை நிறுவினார்.
உலகளவில் தமிழ் மொழி பழமையான மொழியாகும். சுப்ரமணி பாரதியாரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், இந்திய அளவில் பாரதிய பாஷா உத்சவ் கொண்டாடப்படுகிறது. மத்திய அரசு தமிழ் மொழியின் இலக்கியத்தை போற்றும் வகையில், பிரபல கல்வி நிறுவனங்களில் பாரதியாரின் பெயரில் இருக்கைகள் அமைத்துள்ளது. 8வது அட்டவணையில் தமிழின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் வளமான கலாச்சாரத்திற்கு மரியாதை அளிக்கும் விதத்தில் புதிய கல்விக் கொள்கை 2020 முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. ஒவ்வொரு மாணவரும் தங்களது தாய்மொழியில் தரமான கல்வி பயில்வதை இந்த புதிய கல்வி கொள்கை உறுதி செய்கிறது.
புதிய கல்விக் கொள்கை அனைத்து மாநிலங்களிலும் கண்டிப்பாக அமல்படுத்தப்படும். புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சமாக இந்திய மொழிகளின் கற்றல் வலிமைப்படுத்தப்படும்.
இந்திய கல்வி வடிவமைப்பில் 1968 முதல் மும்மொழிக் கொள்கை முதுகெலும்பாக விளங்குகிறது. பள்ளியின் கல்வி அமைப்பில் வெளிநாட்டு மொழிகள் அதிகம் கற்பிக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கு தாய்மொழி கற்பித்தலுக்கான சூழ்நிலை குறைந்து வருகிறது. அந்த வகையில், புதிய கல்விக் கொள்கையில் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைக்கபட்டுள்ளது.
தமிழ்நாடு எப்போதும் கல்வியின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தத்தில் வழிகாட்டியாக இருந்துள்ளது. அதே போல் நவீன கல்வியின் வளர்ச்சியின் வடிவமைப்பிற்கு முன்னோடியாகவும் விளங்குகிறது.
புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் காரணங்களுக்காக வரும் எதிர்ப்புகளால் தமிழ்நாடு கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் பாதிக்கப்படுகிறது. ஓவ்வொரு மாநிலத்தின் கல்வித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டம் புதிய கல்விக் கொள்கையோடு சேர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மும்மொழி கொள்கை: எந்த காலத்திலும் 'வாய்ப்பில்லை' - உதயநிதி ஸ்டாலின் - UDHAY REPLY TO DHARMENDRA PRADHAN
புதிய கல்விக் கொள்கை தொலைநோக்கு பார்வையுடனும், கல்வியின் சீர்திருத்தம் கொண்டு வரும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படாது. பாஜக ஆட்சி நடைபெறாத பல மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. அரசியல் வேறுபாடுகளுக்கு இடம் அளிக்காமல் மாணவர்களின் நலன் கருதி இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிபிப்பிட்டுள்ளார்.